Tuesday, 8 May 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


                                                               தொடர்- 13

ஆல மரங்களையும் விழுதுகளையும் கண்டவுடன் இலேசான அச்சம் பரவத்தொடங்கிற்று. நான் படித்துக்கொண்டிருந்த ஓட்டமாவடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்கு முன் (தற்போது பாதிமா பாளிகா பெண்கள் பாடசாலை) பெரியதொரு ஆல மரம். அனீபா காக்காவின் ஐஸ் பழ சைக்கிள் இடைவேளையில் தரித்து நிற்க தோதான இடம்.அனீபாக்கா ஏறாவூரிலிருந்து ஐஸ்பழம் விற்க சைக்கிளில் வந்து போவார். சில மூத்தம்மாக்களின் கச்சான்,வடை வியாபாரமும் ஆலமரத்தின் கீழ் மும்முரமாய் இருக்கும்.

இன்றைய மூத்தம்மாக்கள் கச்சான் வடை விற்பதையெல்லாம் அறியமாட்டார்கள்.பேரப்பிள்ளைகளின் பாதுகாவலர்,பிள்ளைகளின் வீடுகளில் காவல் பார்க்கும் இலவச காவலாளி,வெளியூரில் மாற்றலாகிப்போகும் குடும்பங்களில் சிறைவைக்கப்படும் சிறகிழந்த கிழட்டுக்கிளிகள்.

 இந்த மூத்தம்மாக்களுக்கு பான்கீன்மூனைத் தெரியும் அவரின் உற்ற இலங்கை நண்பர் விமல் வீரவங்சவையும் தெரியும்.கிரிக்கெட் தெரியும்,அப்துல்கலாமை தெரியும். எனது மூத்தம்மாவுக்கு ஆல மர பேய்களையும் மரணத்தின் கட்டியக்காரி குருட்டுப்பக்குளையும் தவிர வேரென்ன தெரியும்.

இந்த ஆலமரத்தைப் பற்றி எனது மூத்தம்மா கதைகதையாக சொல்லுவா.அதன் விழுதுகள் பேய்களின் ஊஞ்சலாம். இரவில் அவைகள் கூட்டாக ஆடிக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் மறுநாள் எழுந்திருக்கமாட்டார்களாம்.

நள்ளிரவில் சினிமா பார்த்து விட்டு வந்தவர்கள்; தலைவிரிகோலமாக ஒரு பெண் இந்த ஆலமரத்தில் ஊஞ்சலாடுவதைப் பார்த்து இரத்தம் கக்கிச் செத்ததாகவும் மூத்தம்மா சொன்னா.

எஸ்.ஜே.சூரியாவின் சினிமாவைப் பார்த்துவிட்டு நள்ளிரவில் வருபவர்களுக்கும்,சில தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் கதைகளைப் படிப்பவர்களுக்கும் நவீன பேய்களில் நல்ல பரிச்சயம் இருக்கும் என்பது மகா உண்மை.

இன்னுமொருநாள் இப்படித்ததான் தனியே வந்த ஒருவனிடம் தன் கை வரிசையை காட்டியதாம் பிசாசு. ஆல மரத்தின் அடியில் ஒரு பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு நின்றாளாம். பிள்ளை அழுது கொண்டிருந்ததாம்.இவர் அருகில் சென்றவுடன் அந்தப்பெண் காக்கா இந்தப்பிள்ளய கொஞ்சம் புடிங்க என்றாளாம். இவருக்கு விசயம் விளங்கிற்று. ஆளும் பேய்களுக்கு பயப்பிடாத ஆசாமி.

அடியேய் ஹராமில புறந்தவளே என்னிட்டயாடி உன்ற திருவிளையாட்ட காட்டுறாய் என்று திட்டி ஆயதுல்குர்சீயை ஓதி அவளுக்கு ஊதியபடி திரும்பிப் பார்க்காமல் வூட்ட வந்து கதவ சாத்தியுள்ளார். மூடிய கதவில் ஓங்கி ஒரு அடி. நீ தப்பிட்டாய்டா மகனே என்று ஆக்ரஷமாய் ஒரு முரட்டு பெண் குரல்.

அது யாருமில்ல மோகினிப்பிசாசு.இந்த ஆலமரத்துலதான் இருக்குதாம். தனிய வார ஆம்புளயலப் புடிச்சி இரத்தம் குடிக்குமாம். அது தார பிள்ளய வாங்கினா ஆள் சரி. 

மூத்தம்மாவுக்கு இப்படிக்கதைகள் அத்துப்படி. ஆல மரத்தை வைத்து நிறையக்கதைகள் என் செவிகளுக்குள் வந்து சேர்ந்தன.ஆலமரங்கள் என் வாழ்க்கையில் மரண பயத்தை விதைத்துச் சென்றமைக்கு மூத்தம்மாவின் பேய்க்கதைகளும் ஒரு காரணம்.

ஆல மரத்தில் வெள்ளைப்புடவையுடன் தலைவிரி கோலமாக பாட்டுப்படித்து, சோகமாய் கம்மிங் பண்ணியபடி நடந்து போகும் ஆவிகளை ?சில சினிமாக்களில் பார்த்திருக்கின்றேன்.

நான் பாடசாலை விட்டதும் ஆல மரத்தை திரும்பிப்பார்க்காமலே வீட்டுக்குச் செல்வேன்.குறிப்பாக மதிய நேரத்தில் அந்தப்பக்கம் தலைகாட்டவே மாட்டேன். இந்தப் பேய்க்கதைகள் மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் நம்பிக்கை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அறிவு வளர்ச்சியும்,சன்மார்க்கங்களின்பாலுள்ள நாட்டமும் இவைகளை புறந்தள்ளி வீசியிருக்கின்றன. இறந்தவர்களால் உலகில் உயிருடன் உலாவரமுடியாது என்ற பேருண்மையின் ஒளிக்கீற்றுப் பரவப் பரவ அறியாமை என்ற இருள் விலகியே விட்டது.

இப்போது ஆலமரம் நின்ற இடம் சில படித்தவர்களின் செல்லுபடியற்ற செக், திருப்பிச் செலுத்தாத கடன்,சில விதானைகளின் இலஞ்சக்கணக்கு பார்க்கும் தளமாகவும்,  சண்டைகளின் உறைவிடமாகவும்,சில வாலிபர்களின் மாலை நேர தேவியர் தரிசனங்களுக்காகவும் உபயோகப்படுகின்றது என்பது வேறு விடயம். 
லதீப் ஹாஜியாரின் பேக்கரியில் மாலை நேரம் வீசும் மொறுமொறு பாண் வாசத்திற்கு வராத பேய்களா இனியும் வரும்?

சரி அது அப்படியே இருக்கட்டும். 

நான் சாச்சாவுடன் வனத்திற்குள் வந்த கதைக்கு வருகின்றேன். ஆதிவாசிகளின் ஆண்கள் வெற்றுடம்புடன் இடுப்பில் கச்சையுடன் திரிந்தார்கள்.ஓங்கி வளர்ந்த மரங்கள் நகர்வது போல் இருந்தது.பெண்களோவெனில் ரவிக்கை அணியாத மார்புகளை சேலையால் இழுத்து மறைத்தபடி முழங்காலுக்கு சற்று மேல் நோக்கி சேலை கட்டிக்கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலானவர்கள் காதுகளில் பெரிய வளையங்களையும் மாட்டிக்கொண்டு மூக்குத்தியும் அணிந்திருந்தார்கள். சதா வெற்றிலையை குதப்பிக்கொண்டு புளிச்புளிச்சென துப்பித்திரிந்தார்கள்.

தூர இடங்களிலிருந்து மாட்டுவண்டிகளில் குடும்ப சகிதம் சனங்கள் வந்து குழுமியிருந்தனர்.ஒவ்வொரு குடும்பத்தினரும் தோதான மரங்களில் கூடாரமடித்து தங்கியிருந்தனர்.காட்டின் அமைதியை கெடுக்குமாற் போல் குஞ்சு குருமான்களின் கும்மாளம்.இளவல்கள் ஆற்றில் குதிப்பதும்,மரங்களில் தாவுவதுமாக காடே தன் இயல்பை மீறி அந்தரப்பட்டது.
சாமியாட்டத்திற்குரிய ஆயத்தங்களை பூசாரி செய்து கொண்டிருந்தார். 

அவரைப்பார்க்கவே அச்சமாக இருந்தது.கருத்த ஆஜானுபாகுவான ஆகிருதி.சிவப்பேறிய கண்களால் உருள உருள காட்டையே சுழற்றி வந்தார்.மஞ்சல் நீரால் ஆசீர்வதிக்கப்பட்ட சில ஆடுகளும்,சேவல்களும் அவர் காலடியில் திமிறிக்கொண்டிருந்தன.சாம்பிராணிப் புகை பனிப்புகாரென மேலெழுந்து கரைந்து மறைந்தது.


ஊஞ்சல் இன்னும் ஆடும் .........
எங்கள் தேசம்: 220


Tuesday, 17 April 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                      
                                                     தொடர்- 12

இயக்கத்தில் இணைந்து இணையற்ற கதாநாயகர்களாக ஊருக்குள் நாட்டாமை செய்து வந்த புஹாரியும்,உமரும் முஸ்லிம் பிரதேச குறுநில மன்னர்களாக அரசோட்சிய காலம்.உமர் நல்ல வசீகரமான இளைஞன்.நான் விடுதியிலிருந்து விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம் முள்ளிவெட்டவானில் இருக்கும் வாப்பாவின் கடைக்கு வந்து விடுவேன். 

இப்படி வரும்போதெல்லாம் இயக்கப்பொடியன்களில் கண் விழிப்பதுண்டு. பார்த்துப்பழகிய முகங்கள்.கூடிக் குலாவிய நண்பர்கள்.உருவத்திற்கு மிஞ்சிய துவக்குப்பிடிகள் சதா அவர்களை துன்புறுத்தியபடி துருத்தி நிற்கும்.சிரிக்க மறந்த விழிகள் எதையோ வெறித்தபடி கனவுகளை தொலைத்துவிட்ட பரிதாபமாய் இன்று என்னுள் அந்த விழிகளின் கரிய நிழல் ஊஞ்சலாடுகிறது.

ஒரு மதிய நேரம் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன்.நீர் பம்பியின் வட திசையில் குளக்கட்டின் ஓரத்தில் உமர் இருந்தார்.அடர்ந்த பனை மரங்களின் கீழ் வலது கையை கன்னத்தில் வைத்து ஊன்றியபடி அவர் படுத்திருந்தார்.

நான் அவரைக்கண்டதும் சைக்கிளைவிட்டு இறங்கி அருகில் சென்றேன்.அவர் துவக்கு பனை மரத்தில் சாத்தப்பட்டிருந்தது. இடுப்பில் ஒரு பட்டி. அதற்குள் குண்டுகளும் ரவைகளும்.நிரப்பட்டிருந்தன.கையில் வாக்கிடோக்கி உறுமியபடி இருந்தது.என்ன மருமகன் வாப்பாட கடைக்கா என்றார். ஓம் மாமா என்றேன்.பின்பு எனது படிப்பு,இன்ன பிற விசயங்கள் பற்றியெல்லாம் கேட்டார்.

அவர் சகோதரியின் மகனும் என்னுடன்தான் படித்தார். நானும் அவனும் நல்ல நண்பர்கள்.அயல் வீடும் கூட. அவனைப்பற்றியும் விசாரித்தார்.இடைநடுவில் அவன் படிப்பை முடித்து விட்டு மாமாவுக்கு எதிராக பொலிசில் போய் சேர்ந்து துவக்குடன் திரிந்தது வேறு கதை.

ஓவ்வொரு கேள்விக்குப்பின்பும் நிதானமாக ஓய்வெடுப்பார்.ஆற்றுப்பக்கம் பார்வை விழும்.

அமைதியாகவே சிரிப்பார்.பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு படித்து என்ன செய்யப்போறிங்க, பேசாம இயக்கத்துல சேருங்க என்றார். அந்தச்சிரிப்பு அப்படியே அவர் உதட்டில் அப்பிக்கொண்டு ஈரலித்தது.கிரிக்கெட் மட்டைக்குப்பதிலாக துவக்குகள் அரசோட்சிய யுகம் அது. 

இப்படித்தான் இயக்கத்திற்கு ஓடி ஓடி ஆள் சேர்த்தவர்களை அந்த இயக்கம் தலை கீழாக வெட்டிப் புதைத்த காலம் வந்தது. 90ம்ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டும் முஸ்லிம்களை விரட்டிய பின் இயக்கத்துல இருந்த முஸ்லிம் போராளிகளையும் ஓரங்கட்டியது. ஓரமென்றால் சுட்டுக்கொன்று தலை கீழாக மண்ணில் புதைத்தது.

உமர் மாமாவையும் இப்படித்தான் வாகநேரிக் காட்டில் புதைத்து விட்டதாக பார்த்தவர்கள் சொல்லக்கேட்டு அதிர்ந்திருக்கின்றேன். சக தோழனை இயக்கத்திற்காக ஆள் திரட்டியவனை இயக்கமே தஞ்சமென நம்பியவனை,தன் சொந்த உறவுகளை வெறுத்து தலைவனை நேசித்து சமயத்தையும் சமுதாயத்தையும் தூக்கி எறிந்துவிட்டு இயக்கமே மூச்சு என நம்பி வந்தவனை ஒரே காட்டில் உறங்கி, ஒன்றாக வாழ்ந்தவனை உயிருடன் சுட்டுக்கொன்று புதைப்பதற்கு எப்படி மனசு வந்தது. 

பிரபாகரன் என்ற கொடுங்கோலனால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதை உமர் மாமாவை நிகர்த்த பலரின் மரணங்கள் எனக்கு உணர்த்திக்காட்டின.

மாவீரர் இல்லங்களுக்கு பெட்டிகள் செல்வது போல் ஓட்டமாவடிக்கும், வாழைச்சேனைக்கும் புலிக்கொடி போர்த்திய சந்தூக்குகள் வந்தன.ஏன் போராடினோம், யாருக்காகப் போராடினோம், எதற்காகப் போராடினோம் என்ற தத்துவங்கள் தெரியாமல் அந்த ஜனாஸாக்கள் அடக்கப்பட்டன. போரின் இழப்பு எங்களையும் அதிகமாகப் பாதித்தது. வெளியே வராத இழப்புகள், பதியப்படாத இழப்புகள் அனந்தம்.

மாவீரர் இல்லத்தின் கல்வெட்டுக்களில் முஸ்லிம்களும்; தமிழீழத்திற்காக தன்னை தியாகம் செய்து உறங்குகிறார்கள் என்றால் இந்தப் போராட்டம் எமக்கு என்னதான் பெற்றுத்தந்து. சரி அதை விடுங்கள்.பின்வரும் அத்தியாயங்களில் பேசலாம்.

இரண்டாவது தடவையாக காடு என்னை வரவேற்றது. சாச்சா திரும்பிப்பார்த்து கஸ்டமா என்றார். இல்லை என்றேன். என் தோளில் சில சாமான்கள்.

நடக்க நடக்க காடு எங்களை ஆவென்று விழுங்கத்தொடங்கியது.சருகுகள் சரசரவென்று அழுந்த நடப்பது திகிலாக இருந்தது. கிளைக்குக்கிளை தாவும் மந்திகளின் அட்டகாசம். காட்டின் விலாவை உரசியபடி ஓடும் ஆற்றின் சலசலப்பு.சாச்சா காட்டிற்கு வசியப்பட்டவர் போல் அவர் பாட்டில் நடந்தார்.

சூரியன் உச்சியில் இருந்ததை சில பொட்டல் வெளிகள் வெளிச்சமாய்க் காட்டின. நடுவனத்தில் திருவிழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தாயிற்று.சாச்சா எப்படி இந்த இடத்தையெல்லாம் கண்டு பிடித்தார்.

கோதுமை மாவில் இந்த நூற்றாண்டின் இணையற்ற உணவுப்பண்டமாம் பராட்டாவையும் சம்முசாவையும் கொத்து ரொட்டியையும்,தயிர் வடையையும்,டேஸ்ட் கிழங்கையும் கண்டு பிடித்த நமக்கு இதுவொரு பொருட்டா? 

மைதானத்திற்குள் திடீரென தூக்கி வீசப்படதான உணர்வு. இது வரை தாங்கி வந்த காடு காறித்துப்பியது போல் இருந்தது. ஏழாம் நாள் குழந்தைக்கு முடி சிரைத்தது போல் வனத்தின் ஒரு பகுதி நன்றாக துப்பரவாக்கப்பட்டிருந்தது.

புற்களற்ற தரையைப் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது.ஓங்கி வளர்ந்திருந்த சில மரங்களின் கிளைகள் குடைபோல் வளைந்து நிழல் பிடித்து நின்றன. கந்துகளின் வகிடில் நழுவி வெளிச்சம் கீழே பாவியது.ஆல மரங்களின் இராட்ச விழுதுகள் பூமியை தொட்டபடி பெருமரமாய் ஆடிக்கொண்டிருந்தன.



ஊஞ்சல் இன்னும் ஆடும் .........
எங்கள் தேசம் 219



Wednesday, 4 April 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

தொடர்- 11
தமிழ் முஸ்லிம் உறவுகள் மனத்தூய்மையுடன் பூத்துக்குலுங்கிய காலமது.கருகருவென்ற கும்மிருட்டிலும்,அடர்ந்த வனாந்தரங்களிலும் விட்டேத்தியாக சுற்றித்திரியவும், அவர்களுடன் கூடவே நடைபோடவும் மனம் பயங்கொள்ளாத காலம்.எனது பதின்மூன்றாவது வயதில் அப்படியொரு பொற்காலம் வாய்த்தது.

ஒரு மாலைப்பொழுதில் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த என்னிடம் சாச்சா வந்து 'தம்பி காலையிலை திருவிழாவுக்குப் போவம் ரெடியாயிரு" என்றார்.

எனக்கு தலைகால் புரியாத குதிப்பு.மறுநாள் காலை வரை நெஞ்சு பொறுக்கவில்லை.எப்போது தூங்கினேன் என்பது நினைவிலில்லை. அதிகாலை சேவல் கூவுவதற்கு முன்.. பொலபொலவென்று விடிவதற்கு முன்... எனது உம்மாவும் கண்விழித்து அப்பம் சுடுவதற்கு முன் கண் திறந்தேன்.

திண்ணையின் நடுவில் தனியே குந்திக்கொண்டு இருண்ட வானத்தையே வெறித்திருந்தது நினைவில் ஆடுகிறது.

சாச்சாவுடன் திருவிழா நடைபெறும் வனத்திற்குச் சென்ற போது பரவசம் தொற்றிக்கொண்டது.

ஆதிவாசிகளின் திருவிழா என்பது நடுக்காட்டில்தான்.வாகநேரிக்குளம் ஆரம்பிக்கும் தளத்திற்கு முன் சரிவில் சரசரவென்று இறங்கினோம். பனைமரங்கள் அடர்ந்த முதற்காடு வரவேற்க, சூரியன் நன்றாக பூமியில் விழுந்தது.கால்கள் நகர நகரப் பெருங்காடு வாவென்று வரவேற்றது.

காட்டின் அடர்த்தியில் கிளர்ச்சி கொண்ட முதல் அனுபவம் இதற்கு முந்திய வருடத்தில் கிட்டியது.இயக்கத்தில் இருந்த சின்னவன் அண்ணாச்சி தலைவர்ர படம் போடப்போறம் வாரியளா என்றவுடன் காடேகியது நினைவில் உள்ளது.

ஒற்றையடிப்பாதையில் கும்மிருட்டில் தீப்பந்தத்தை கையிலேந்தி அண்ணாச்சி வழி நடத்திச்சென்றார். இருள் நதிக்குள் மூர்ச்சையாகி விடுவோனோ என்ற பதைபதைப்பு. என்னுடன் நிறைய நண்பர்கள்.இன்று போல் கிரிக்கெட்டும்.புலமைப்பரீட்சை சிறையும் இல்லாத விடுதலைக் காலம்.

தமிழ்,முஸ்லிம் என்ற வேறுபாடற்ற பயணம்.யாருடனும் பேசாமல் வரும்படி அண்ணர் வனத்தின் தலைவாசலில் வைத்து அறிவுரை கூறினார் ஒரு மைல் தூரம் ஆவலுடன் நடந்தோம்.தலைவரின் உரையை கேட்கும் பரவசம். இன்னதென்று விபரிக்கவியலா இன்ப அதிர்ச்சியுடன் நடந்தோம்.அவர் பிற்காலத்தில் எம்மையெல்லாம் அதிர்ச்சியடையவைப்பார் என்பதை அறியாத பருவம்.

அடர்ந்த காட்டின் மையப்பகுதியில் ஒளி வெள்ளம் பரவியிருந்தது. இது எப்படி சாத்தியம் என்ற ஆவலும் திகைப்பும். வாண்டுகளான எங்களுக்குப் புரியவே இல்லை. துவக்குப் பிடித்திருக்கும் அண்ணாக்களை வித்தைக்காரர்களாகவும் சாகசங்கள் நிகழ்த்தும் அற்புதமானவர்களாகவும் மனம் பதியத்தொடங்கிற்று. 

இருளைக்கிழித்து அரை மைல் தூரம் ஒளிக்கடல் பொங்கிப்பூரித்தது. சின்ன டி.வியை தூக்கிக்கொண்டு வந்து சின்னவர்தான் மேசையில் வைத்தார். 'டெக்கும்" அதனுடன் இருந்தது. படக்கொப்பியை போட்டு விட்டு வெற்றிச்சிரிப்புடன் எமை நோக்கித் திரும்பினார்.தலைவர் பேச்சக்கேளுங்க தம்பிமாரு,கேட்டுப்புட்டு நீங்களும் போராட வரனும்,இப்ப இல்ல பிறகு கூப்பிடுவம் அப்ப வந்தாச் சரி என்றார்.

அக்காலத்தில் ஒரு சில வீடுகளில்தான் டி.வி இருக்கும்.ஒவ்வொரு புதன்கிழமையும் செட்டியார் தெரு லலிதா நகைமாளிகையின் கிருபையால் தமிழ்படம் போடுவார்கள். கருப்பு வெள்ளைப்படங்கள். டி.வி உள்ளவர்கள் அதை முற்றத்தில் தூக்கி வைத்து வாசலில் வந்து குவியும் கூட்டத்திற்கு இலவச சேவை செய்வார்கள். சிலர் அதை பொத்திப்பொத்தி குமர் பிள்ளையைப்போல் வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். முஸ்தபா போடியாரின் மகள் மர்யம் மாமியின் வீட்டுமுற்றத்தில் மணலில் குந்திக்கொண்டு டிவியில் படம் பார்த்த அனுபவத்திற்குப்பின் இப்போது அண்ணரின் கடாட்சத்தால் டிவியில் வீர காவியம் பார்த்தோம்.

இன்று டி.வி இல்லாத வீடு சவம் இல்லாத மயானம் போல ஆகிவிட்டது.ஹோம் தியேட்டர்களும் சட்டலைடுக்களும் கேபிள் டிவிகளும் வண்ண மயம்.முதன் முதலில் வாழைச்சேனை வெளிங்டன் தியேட்டர் அகன்ற திரையில் ஆயிரம் ஜென்மங்கள் பார்த்தது நினைவில் வந்து தொலைக்கிறது. எங்களுக்கு நடுக்காட்டில் அந்த டிவியும்,தலைவரின் வீர உரையும் பரவசம்தான்.

எனக்கும் அந்த துவக்கில் மனம் தொற்றிக்கொண்டது. சொக்லட்,பிஸ்கட்டுக்கு ஆசைப்படுவது போல் அதனையும் பக்கத்தில் வைத்திருக்க பிரியப்பட்டது மனம். 

இடையில் தேனீர் ஊற்றித் தந்தார்கள்.நிறைய அண்ணாக்கள் கையில் துவக்குடன் இருந்து பக்திப் பரவசத்துடன் தலைவரின் உரையை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

யாரும் பேசவில்லை. அன்று அடர்ந்த வனத்தில் அமர்ந்தபடி பிரபாகரனின் மாவீரர் தின உரையைத்ததான் கேட்டிருக்கின்றேன் என்பதை பிற்காலத்தில் நினைத்து அதிசயப்பட்டதுண்டு.   

அதைவிட ஆச்சரியம் அவர்களுடன் அங்கேயே உறங்கி,விடியற்காலையில் சின்ன அண்ணாச்சி வீதிக்கு அழைத்துக்கொண்டு விட்டார் என்பது எவ்வளவு அற்புதமான காலம் அது.யாருக்கும் எந்தச்சேதாரமும் இல்லாமல் உறவுகள் துளிர்த்த காலம்.

இரவில் கடித்து இரத்தம் குடித்த நுளம்புகளையும்,வழியில் கால்களை கீறிக்கிழித்த தொட்டாச்சிணுங்கி முற்களையும் தவிர எங்கள் இரத்தங்கள் மதிப்பாகவும் பெறுமதியாகவும் ஏன் கௌரவமாகவும் இருந்தது .இரண்டாயிரம் ரூபாயை பையில் போட்டுக்கொண்டு தொழிலுக்குச் சென்றால் கழுத்தில்லாமல் கிடக்கும் 'குடு' காலமல்ல அது. எந்தக்காட்டிலும் உயிர்ப்பயமின்றி விசுவாசமாக உறங்கி எழும் அற்புத காலங்கள் அவை. 

அண்ணாச்சியின் இயக்கத்துக்கு வரனும் என்ற வேண்டுகோளுடன் வாகனேரிக்குளக்கட்டும் உமர் மாமாவும் நினைவில் ஊஞ்சலாடுவதை தவிர்க்க முடியவில்லை. 

ஊஞ்சல் இன்னும் ஆடும் 
.........
எங்கள் தேசம் 218


Wednesday, 14 March 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

 தொடர்- 10


விடுமுறையில் செல்லும் போதெல்லாம் நல்ல கவனிப்பு.விறால் கருவாடு பசும்பால்,கோழிறைச்சி, கெலுத்தி மீன்,ஜப்பான் மீன் பொரியல் , திறாய் சுண்டல்,ஆம்பல் மீன்,விறால் மீன்,கொக்கு,விலாங்கு மீன் வறுவல் என வகைவகையாய் நான் உண்டு ருசித்தது இக்காலத்தில்தான்.உம்மாவின் கைப்பக்குவத்தில் இன்னுமொரு எனக்குப்பிடித்த உணவும் இருக்கும்.

இலுப்பைப்பூ கொலுக்கட்டை.அதை  அவித்து மண் பானைக்குள் வைத்து உம்மா மூடி வைத்திருப்பா.நானும் அதிகாலையில் பனிப்புகாரிடை எழுந்து உம்மாவுக்குப்பின் இழுபட்டு சென்றிருக்கின்றேன். இலுப்பை மரங்கள் பெரும்பாலும் ஆற்றோரம் வானுயர்ந்து ஓங்கி நிற்கும். பூக்கத்தொடங்கும் காலம் சுற்றமெங்கும் நறுமணத்தை பரப்ப ஆரம்பித்து விடும்.

 இரவிலே பூமியில் அதன் மலர்கள் உதிர்ந்து கிடக்கும். ஆற்றுநீர் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும்.

சலனமின்றி ஓடும் அதிகாலையின் அழகு அற்புதமாக இருக்கும்.உம்மா கால் வைக்க விடமாட்டா.

முதலைகிடக்கும் முதலை கிடக்கும் என்று அடிக்கடி எச்சரித்தபடி இருப்பா கொண்டு போன உர சாக்கில் இலுப்பைப்பபூக்களை பொறுக்கிக்கொண்டு திரும்பும் போது சூரியன் மேலேறி உருகிகிக் கொண்டிருப்பான்.

பூக்களை கழுவி,சுத்தமாக்கி வெய்யிலில் காய வைப்பா.பின் உரலில் இட்டு இடித்து மாவாக்கி வைத்துக்கொள்வா. அதனுடன் அரிசி மாவையும் கலந்து சர்க்கரை உப்பும் சேர்த்து கலவையாக்கி உள்ளங்கையில் சின்ன சின்னக் கொழுக்கட்டையாய் பிடித்து வண்டில் வைத்து புளுக்கி எடுப்பா. இலுப்பைப்பூ கொளுக்கட்டை உடனே திண்பதற்கு ருசியாக இருக்காது.

அவித்து மண் பானைக்குள் மூடி வைத்து நாள்பட நாள் பட அதன் ருசியோ அலாதி.அந்தக்கொளுக்கட்டையை இப்போது நினைத்தாலும் குட்டி நாக்கு ஸலாம் போடுகிறது. உம்மா எது சமைத்தாலும் அதில் அற்புதமான சுவைகள் மலிந்திருக்கும்.

எனக்கு முருகக்காய்ச்சிய பசும்பால் அலாதி விருப்பம். மூத்தாப்பாவின் பட்டியிலிருந்து பசும்பால் காலையில் கடைக்கு வந்து விடும்.உம்மா முருகக்காய்ச்சி  கற்கண்டும், கோப்பிப்பொடியும் கலந்து கொடுப்பா.

மணமும் ருசியும் சொல்லில் மாளா. மாட்டுப்பட்டிக்கு மூத்தாப்பா சில நேரங்களில் என்னையும் தம்பியையும் அழைத்துப்போவார். அவருக்கு இரண்டு பட்டிகள்  இருந்ததைப் போல் எனக்கு இரண்டு மூத்தம்மாவும் வாய்த்து விட்டார்கள்.

எருமை மாட்டுப்பட்டி,பசு மாட்டுப்பட்டி என்று இரண்டு பட்டிகள். தயிருக்கு எருமைப்பால் குடிப்பதற்கு பசுப்பால். இரண்டு பட்டிகளையும் பார்ப்பதற்கு கிருபை என்ற ஒருவர் இருந்தார். மூத்தப்பாவுக்கு விசுவாசமான பணியாள் போடியார், போடியார் என வார்த்தைக்கு வார்த்தை பவ்யமாக அழைக்கும் அவர் குரல் மாடுகளின்  வால் விசுக்குகளை மீறியும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

காலையில் பசுவின் மடியிலிருந்து பால் கறப்பதை பார்க்க விரும்பினேன். கிருபைதான் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பட்டிக்கு அழைத்துச்சென்றான். கூடவே தம்பியும். கன்றுகள் சிறு நாற்சதுர கம்பி வேலிக்குள் அடைபட்டு நிற்கும். அவற்றினது  அம்மாக்கள் வெளியில் நின்றபடி குரல் கொடுக்கும்.அம்மாக்களின் வருகையால் கன்றுகளின் குதியாட்டத்தில் வேலிகள் திணவெடுக்கும்.

கிருபை ஒவ்வொறு பசுவாக இழுத்து வந்து கனுவில்  கட்டுவார். பின்னங்கால்களையும் இணைத்துக்கட்டியபின் கன்றுகள் அடைபட்டுக் கிடக்கும் வாயிலைத் திறந்து லட்சுமி..லட்சுமி என்பார்.

 வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக்குதித்தபடி கன்றுக்குட்டி ஓடிவரும் தாயின் பெயரைச்சொன்னவுடன் கன்று அந்தக்கூட்டத்திலிருந்து பிரிந்து வெளியே வந்து தாயின் முலையில் முட்டி முட்டிக்குடிக்கும்.

தாய்ப்பசு ஆதுரமாக பின் பகுதியை நாவால் தடவியபடி அன்பைச் சுரக்கும். கிருபை ம்..லட்சுமி வாவென்று கன்றை இழுத்து அருகில் இருக்கும் கனுவில் கட்டுவார். வாளியை தொடையில் இடுக்கியபடி பசுவின் மடியை கழுவி நீவி விட்டபடி ஒவ்வொரு முலைக்காம்பிலும் விரல் வைத்து அழுத்தி விடுவார்.

வாளிக்குள் சர்சர்ரென நுரை தள்ளி பால் நிறையும்.பின் கன்றை அவிழ்த்து விடுவார். பிறகு இழுத்துக்கட்டி பால் கறப்பார். பெரிய அண்டாக்களில் பால் நிரம்பித் ததும்பும். இரண்டு வியாபாரிகள் சைக்கிளில் வந்து பாலை எடுத்துப் போவார்கள்.

இளங்கன்றின் கறந்த பாலை ஒரு கோப்பையில் ஊற்றி கிருபை தம்பி குடிச்சிப்பாருங்க நல்லா இருக்கும் என்றார். எனக்கு அருவருப்பு. முருகக்காய்ச்சாவிட்டாலே மொச்சை மணக்குது என்று பால் குடிக்காதவன். பச்சை பாலையா குடிப்பது?

 தம்பியோ எனக்கு நேர் எதிர். எனக்குத்தாங்கண்ண குடிப்பம் என்றவன் கறந்தவுடன் வாயில் ஊற்றி சுவைத்துக் குடித்தான். அவனை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தேன். காக்கா ருசியா இருக்கு குடிச்சிப்பாருங்களேன் என்றான் . கிருபை மறுபடியும் கறந்து என்னிடம் நீட்டினார். ஒரே மடக்கில் குடித்து முடித்தேன். இளம் சூடு,கொஞ்சம் சர்க்கரை போட்டது போல் இனிப்பு. முருகக்காய்ச்சிய மணம்.

இதன் பிறகென்னவோ கறந்தவுடன் பால் குடிக்கும் மனப்பக்குவம் எனக்குள் வரவில்லை.

பிற்கால சனி ஞாயிறுகள் ஆற்றிலும், குளத்திலும் காடுகளிலும் கழிந்தன.
தூண்டில் போட்ட மீன்களை நண்பர்களுக்கே தாரைவார்த்து விட்டு வீட்டுக்குத் திரும்புவேன்.

இப்போதும் ஆற்றோரம் சென்றால் திராய் செடி தேடுவதைக்காணும் நண்பர்கள் ‘ஞானச்செடி தேடுகிறார்’ என்ற கிண்டல்கள் அக்காலங்களுக்குள் புதையுண்டு போய்விடும்.

உளுவ மீன் போட்டு துவைத்து தரும் திறாய் சுண்டல் எங்கே நட்ஷத்திர ஹோட்டல்களில் வகை வகையாக பண்டங்களையும்,உணவுகளையும் ருசித்தாயிற்று.

அந்த பொன்னங்கன்னி கீரையும், திராய்சுண்டலும், கோல்டன் மீன் பாலாணமும், முருங்கைக்காயுடன் சுங்கான் கருவாட்டுக்கறியும் புளியாண ருசியும் நாக்கில் ஊறிக் கொண்டிருப்பதை நிறுத்த முடியவில்லை.

இந்த சௌந்தரியங்களை அனுபவிக்க முடியாத ஒரு கைங்கரியத்தை உம்மாவும் வாப்பாவும் எனக்குச்செய்தனர்.12மைல் தொலைவில் உள்ள மாமாவின் வீட்டில் தங்கவைத்து படிப்பதற்கான சதிதான் அது. பல சதிகளை முறியடித்த எனக்கு அந்த நல்ல சதியை தோற்க முடியவில்லை.


ஊஞ்சல் இன்னும் ஆடும் .........
எங்கள் தேசம் 217

Tuesday, 6 March 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


 தொடர் - 09

 34அடியாழமுள்ள கிணற்றில் கப்பியில் நீர் அள்ளுவதும்,சைக்கிளில் இரு மருங்கிலும் குடத்தைக்கட்டிக்கொண்டு ஆற்றில் நீர் மொண்டு தளும்பாமல் இலைகளை உடைத்து சொருகிக் கொண்டு ஒற்றையடிப் பாதையில் சைக்கிள்  உழத்தி வருவதும்  ஒரு சவால். அதை ஒவ்வொரு வார விடுமுறையிலும் நான்தான் செய்தேன்.

நான் முதலில் சைக்கிள் மிதிக்கப் பழகிய அந்த நாள் ...

சாச்சாவின் சைக்கிளில் புளிமரத்தடி மேட்டிலிருந்து குளத்திற்கு செல்லும் பள்ளத்தில்தான் முதல் சவாரி. சாச்சா சைக்கிளை பிடித்துக்கொண்டு கூடவே வருவார்.பாருக்கு கீழ் கால்களை தெத்தித்தெத்தி உழத்திக்கொண்டு போவேன்.சாச்சா பிடித்துத்தானே வருகிறார் என்ற தெம்பு.

சற்று ஊன்றி மிதித்து விட்டேன் .பள்ளத்தில் கிறவல் வீதியில் சைக்கிள் சரிந்து விழ கெக்கலித்துச் சிரித்தபடி சாச்சா ஓடி வந்தார். அவர் கண நேரம் கைகையை விட்டு விட்டு என்னை சுயமாக ஓட விட்ட செய்தி அப்போதுதான் உறைத்தது. வலது காலில் சைக்கிள் பழகி வாங்கி அந்த விருது இன்னும் தழும்பாக இருக்கிறது. 
இலக்கிய விருதுகளை விட கால் தழும்பை தடவிப்பார்க்கையில் நெஞ்சு நிரம்பித்ததும்பும் நினைவுகளே நித்ய விருதுகளாக என்னை  உசுப்பி விடுகின்றன.

(அண்மையில் மோட்டார் சைக்களில் கிறவல் வீதியில் நாயொன்றுடன் மோதிப்பட்டு விழுந்த போதும் அந்த நினைவுகள் சட்டென நெஞ்சில் விழுந்து நினைவுகளைக் கோதிவிட்டன)

மோட்டார் சைக்கிள் பழகியது விழுந்து விடாமல் என்றால் அதில் ஒரு மர்மம் இருக்கின்றது. எனது தோழரின் வாப்பா அலியார் ஹாஜியாரிடம் ஒரு  ‘செலி’பைசிக்கிள் இருந்தது.நாங்கள் அதை செல்லமாக தும்பி என்போம். அவர் சனிக்கிழமை வயலுக்குப்போகவென மூட்டைமுடிச்சுக்களுடன் வந்து விடுவார்.

ஆற்றைக்கடந்து பைசிக்கிள்கள் செல்ல முடியாது என்பதால் வியாழக்கிழமை வரை எங்கள் கடையில் விதம்விதமான சைக்கிள்கள் குவிந்து கிடக்கும்.

அலியார் போடியாரிடம் ஒரு நாள் கேட்டுவிட்டேன்.

'நான் உங்கட சைக்கிள எடுத்துக்கிட்டு ஊருக்கு (ஓட்டமாவடி குறுக்குப்பாதை எட்டு மைல்,பிரதான வீதி 12 மைல்) போகவா? '

என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு கேலியாகக் கேட்டார்.

'ஓடுவியளா'?

'ஓம் 'என்றேன்

சத்தியமாக கண்களாலே தவிர கைகளால் ஓடிப்பார்த்ததில்லை. அந்த தைரியத்தில் ஓம் வந்து விட்டது. முதலில் வாப்பாவுக்குத் தெரியாமல் தும்பியைக் கிளப்ப வேண்டும். எப்படியோ கிளப்பியாகி விட்டது. முதலில் காவத்தமுனையில் இருக்கும் மூத்தம்மாவின் வீட்டிற்குச்செல்வது. குறுக்கு வீதியில் வாகனங்களும் மனிதர்களும் அவ்வளவாக புழக்கமில்லை.

கண் கண்டதை கை செய்யும் என்பார்களே எப்படியோ வாப்பா வயலுக்கச்சென்று வருவதற்கிடையில் சென்று வந்து விட்டேன்.லைசன், இன்சுரன்ஸ் தலைக்கவசம் எல்லாம் தெரியாத காலம்.புலிகளின் ஆட்சி உச்சத்தில் இருந்த காலம்.

சில நாட்களின் பின் பிரதான வீதியால் தும்பியை எடுத்துக்கொண்டு செல்வது என்று தீர்மானித்தேன்.ஆறாங்கட்டையில் உள்ள புலிகளின் பிரதான கேம்பில் நிறுத்தினார்கள். 

‘சின்னப்பொடியன்கள் சைக்கிள் ஓட்டப்படாது சைக்கிள கொண்டு போய் உள்ளுக்க வை’  என்றான் ஒருவன்.

எனக்கு கைகால்கள் உதறத்தொடங்கின. வாப்பாவுக்குத் தெரிந்தால் பாடு சம்பல்தான்.

கடைப்பக்கம் வரும் சின்னவன் தூக்க முடியாத பாரத்துடன் ஏ.கே. 47 டன் நின்றிருந்தான். என்னைக் கண்டதும் என்னவென்றான். விடயத்தைச்சொன்னேன்.அவன் பெரியவனிடம் போய் கதைத்தான்.

‘ஆர்ர சைக்கிள் என்றான் ‘ பெரியவன்.

'அலியார் போடிர’ என்றேன். அவரின் வீடொன்றில்தான் புலிகளின் பிராந்தியக்கிளை ஒன்று ஊருக்குள் இயங்கிவந்தது. இரு தரப்பு பிணக்குகளைத்தீர்த்து வைக்கும் சமாதான தூதராகவும் புலிகளின் மதிப்பு மிகு மனிதராகவும் அவர் இருந்தார் என்பது பிற்காலத்தில் தெரிய வந்தது.

‘எந்த அலியார் போடி ‘? என்றான்

நான் ஊரைச் சொன்னேன்.பயத்தில் ஆள் அடையாளத்தையும் சொன்னேன்.
சைக்கிள தந்து வந்த வழிய போ என்றான்.

அன்று மனதில் பதிந்த வடு ஆறுவதற்கு பல காலம் எடுத்துக் கொண்டது கூடவே ஒரு சபதமும். சொந்தமாக பைசிக்கிள் வாங்கித்தான் இனி ஓடுவது.

காயங்கள் மட்டும்தான் இடம் மாறி இருந்தன. நினைவுகள் என்னவோ அந்தக்குளக்கட்டின் கிறவல்  வீதியில் விழுந்து அவதிப்பட்டுக்கொண்டு துடிக்கின்றன.
ஆற்றிலிருந்து தண்ணீர் தாங்கிய சைக்கிள் ஒற்றையடிப்பாதையில் அலுங்காமல் வருவதென்றால் எத்துனை 'தில்' வேண்டும் என்பதை அந்தப் பாதையில் ஓடிப்பார்த்தால்  தெரியும்.
இது ஒரு விளையாட்டு. தற்போது நினைக்கையில் ஆச்சரியமாகவும் சாகசமாகவும் இருக்கின்றது.

என்னுடன் சைக்கிள் விட பல நண்பர்கள் இருந்தார்கள். ஓற்றை வயல் வரம்பில் சைக்கிள் ஓட்டுவதில் எங்களுக்குள் போட்டி நடக்கும். காட்டுப்புதரில் ரயர் படாமல் மிதிக்க வேண்டும். சில நேரம் நான் சறுக்கி விடுவேன். சில நேரங்களில் ஜெயிப்பதுண்டு.
ஊஞ்சல் இன்னும் ஆடும்.........
எங்கள் தேசம் 216

Tuesday, 21 February 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

 
 தொடர் -08

தோட்டத்திற்கு முன்னால் பெரிய ஆட்டுப்பட்டி.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட செம்மறியாடுகள். அடர்ந்த உரோமங்கள்,சதா துக்கம் நிறைந்த கண்களுடன் பூமியை உற்று நோக்கிய படி அந்த ஆடுகள் தனித் தனியே பிரிந்துதான் படு சுறுசுறுப்பாக மேய்ச்சலுக்குச்செல்லும்.

அவை எம்.கே. ஹாஜியாரின் பட்டி. அவரின் பூர்வீகம் இந்தியா.ஆடுகளை கவனிப்பதற்கென நிரந்தரமாக இரண்டு குடும்பங்கள் குடிசைபோட்டிருந்தன. ஹாஜியார் வாரமொரு முறை வியாழக்கிழமைகளில் வருவார்.

முகடு திறந்த ஜீப் வண்டி புழுதியை இரைத்தபடி கடை முன்றலில்தான் தரித்து நிற்கும்.வாப்புப்பாவிடம் அவருக்கு கொள்ளைப்பிரியம் இரண்டு பேரும் சிரித்தபடி ஆடுகளைப்பார்க்க கிளம்பிப்போவார்கள். அவரின் ஜீப்புக்கள் தொழுவதற்கான முசல்லா, தண்ணீர் பாய் உட்பட அனைத்தும் இருக்கும்.
 
ஹாஜியார் சென்ற பின்பும் ஓரிரு நாட்கள் அவர் விட்டுப்போன ஜன்னதுல் பிர்தவ்ஸின் நறுமணம் புளிய மரத்தைச்சூழவும் கமகமக்கும்.

சற்று தொலைவில்  பரந்து கிடக்கும் வயல் வெளி. வயலையும் குளத்தையும் பிரிக்குமாற் போல் இராட்சத பாம்பாய் படர்ந்து நீளும் குளக்கட்டு. வயலைத்தாண்டி விழுந்தால் மாந்துரை ஆறு.

எங்கள் அடுப்படியில் எப்போது உலை கண் மூடும் என்று தெரியாது.புசுபுசுவென்று அடுப்பெரிந்து கொண்டே இருக்கும். சதா ஆக்கி கொட்டுவதற்கு அக்காமார்கள். பாக்கியம்,திரவியம், ராசாத்தி. நீங்கள் எங்கிருக்கின்றீர்கள் என்ன ஆயிற்று உங்கள் அந்திமம்.
 இது வரை தெரியாது.

தங்கைகள் இருவரும் வாகநேரி தமிழ் கலவன் பாடசாலையில் படிக்க போவார்கள். நான்கு மைல் தெலைவு. நடந்து போய் மறுபடியும் நடந்தே வருவார்கள். சைக்கிளில் வரும் தெரிந்தவர்கள் ஏறச்சொன்னாலும் ஏறிவரவேமாட்டார்கள். நடப்பதில் அப்படி ஒரு சுகம் அவர்களுக்கு. 
 
'மில்க்போர்ட்' சந்தி வரை கலகலவென்று வெண்புறாக்கூட்டம் கலைவதைப்போல் மற்றப்பிள்ளைகள் விடைபெற அவர்கள் மட்டும் மீதியிருக்கும் ஒரு மைல் தூரத்தை தனித்து நடந்து வந்து விடுவார்கள்.

இருந்தாற்போல அவர்களுக்கும் சைக்கிள் சவாரி வாய்த்து விடும்.ஊரிலிருந்து வரும் சாச்சாமார்களின் சைக்களின் முன்னே ஒருவரும் பின் கரியறில் ஒருவருமாக கலகலப்பாக வந்து இறங்கியவுடன் உம்மாவின் நக்கல் வந்து வாசலில் விழும்.  
 
“ என்னடி குளக்கட்டு நாளக்கு உங்கள கோவிக்காதாக்கும்..”

அந்தப்பாடசாலையில்தான் எனது மாமிமார்களும் சாச்சாமார்களும் படித்ததாக வாப்புப்பா சொல்வார்.

வாப்புப்பாவின் கடைக்கு வன்னியனார் கடை என்றால் பிரசித்தம். புளியமரத்தடிக்கடை என்பது பின்னாளில் மருவிற்று, கடை என்றால் கிராமத்திற்குரிய அசல். அகன்ற புளியமரம், கடைக்கு முன்னால் குரல் நீட்டி முழங்கும் ரோடியோ. ஒரு சோகேஸ்.

அதற்குள் கொஞ்சூண்டு தயிர் வடை, போலை, பாலப்பம், வண்டப்பம், லெவரியா (கோழிஅப்பம்) கவண்ரொட்டி,தட்டு ரொட்டி.உம்மாவினதும் வாப்பாவினதும் கைவண்ணத்தில் தயாராரிக்கப்பட்ட பண்டங்கள்.

சில தட்டுகளில் பியான் ரோல்,பனிஸ், அட்டக்கேக், யானக்கத்தா,ரோஸ்பான், வட்டர்,கட்டப்பான் (ஆட்டுக்கால்) கொழும்பு வட்டர் பான் வகையறாக்கள்.

கடை பென்ஜில் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். யாழ்ப்பானத்து பாணிச்சுருட்டும்,பீடியும் வாயில் இருக்க தம்பி,பிரபாகரனிதும்,ஜே.ஆரினதும் அரசியல் சாணக்கியங்கள் பற்றிய கதைகள் சூடுபறக்கும். வாப்பா டீ ஆற்றுவதில் ஒரு கண்ணும் ‘சோகோசி’ல் ஒரு கண்ணுமாய் இருப்பார்.

இரண்டை விழுங்கி விட்டு ஒன்றுக்கு கணக்கு விடுபர்கள் கையும் களவுமாக அவரிடம் கடன் பட்டு சொல்லி கழன்ற கதைகளும் முன் பென்ஜில் இருப்பவர்களால் ஹாஷ்யமாக சொல்லப்படும். கொல்லென்ற சிரிப்பினிடை எட்டி நின்று மேயும்  அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் கழுத்து மணிஓசையும் சேர்ந்து கொள்ளும்.

பட்டிதொட்டியெல்லாம் பால் சேகரிப்பவர்கள்,மீன்வியாபாரிகள்,புல் அறுக்கச்செல்பவர்கள்.கீரை அறுக்கும் கூட்டம்,கரை வலை வீசுபவர்கள் என்ற அடிமட்ட தொழிலாளியும், போடிமாரும் ஒன்றாய் கலப்பதற்கும் கதைப்பதற்கும் புளியமரத்தடிக்கடை வாகாக இருந்ததது.

வாப்புப்பாவின் ஹாஷ்யத்திற்காக அவர் வாயைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகம். இன்சிப்பிளேன்றியுடன் லெவரியாவைக்கடிக்கும் போடிமார் மட்டும் வெற்றிலை வட்டுவத்தை உருவி விட்டபடி இருப்பர்.

அதற்குள் பாக்கு சீவல், சுண்ணாம்பு டப்பா, ஏலக்காய்,சாதிக்காய்,கராம்பு, வெற்றிலை,புகையிலைத்துண்டுகள்.கையிப்பு.

 கையிப்புத்தகட்டுக்குப்பெயர் போன இடம் ஏறாவூர், வட்டுவத்திற்குள் அறையாகப்பிரித்து இவைகளை போடிமாரின் பெண்டிர் அடுக்கி வைத்திருப்பவர். சுற்று மெதுவாக மெல்ல சின்ன உரலும் துவைப்பதற்கு ஆணியும் இருக்கும்.

 பாக்குச்சீவலை உரலுக்குள் இட்டு, வாசனைப்பொருட்களையும் இட்டு துவைக்கும் ஓசையுடன் ஊர் வம்பும் பசைபோல் அரைபடும்.

எங்கள் கடைக்கு முன் எப்போதும் ‘தீனா’(தீக்கிடங்கு) எரிந்து கொண்டிருக்கும்.பச்சை மரங்களை வெட்டிப்போட ஆட்கள் இருந்தார்கள்.

மஃரிபு நேரத்தில் ஊரிலிருந்து வரும் மாட்டு வண்டிகள் இங்கு தரித்து விடும். கரத்தைகளின் கீழ் தொங்கும் லாந்தரின் மினுக்கம் கண் சிமிட்டி வாவென்று அழைப்பது போன்றிருக்கும். 
 
வால் வண்டிலில் ஒரு சாக்குப்பை கட்டப்பட்டிருக்கும். அதற்குள் கத்தி மண் வெட்டி உள்ளிட்ட சட்டி பானைகளும் அடக்கம்.

 யானைகளுக்குப் பயந்து வண்டில்காரர்கள் புளியமரத்தடியில் குவிக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலில் படுத்துக்கொள்வார்கள்.

தீனாவைச்சுற்றி மாடுகள் நுளம்புகளை விசுக்விசுக்கென வாலால் விரட்டியபடி அசைபோட்டு நிற்கும். இந்த மாடுகளுக்கு நல்ல ஞாபக சக்தி.

 வண்டி ஓட்டிக்கொண்டு வருபவர்கள் கண் மூடிப்படுத்தாலும் வழக்கம் போல் தரித்து நிற்கும் கடைகளில் மாடுகள் சற்று இளைப்பாற நிற்கும். யாராவது தட்டி எழுப்பினால் உண்டு. இல்லாவிட்டால் என்ன தேனீர் குடித்து மீளவும் ஏறும் நாழிகை அதற்கு அத்துப்படி.வண்டிக்காரன் எழும்பாவிட்டால் அரை மணி நேரத்திற்குள் காளைகள் நடையைக்கட்டும்.

இடையில் சக வண்டில்களுக்கும்,ஏனைய பிரயாணிகளுக்கும் வழிவிட்டபடி ஐந்தறிவு ஜீவன்களின் பயணங்கள் தொடரும். செக்கலுக்குப்பின் வண்டியோட்டிகள் தூங்கவேமாட்டார்கள்.

 வனப்பாதையில் மாடுகள் நேரே பழகிய  பாதையில் சென்று விடும். யானைகளின் தொல்லைகள் அதிகம் என்பதால் புளியமரத்தடி கடை வரை விழித்துக்கொண்டு வருவர்.லாந்தரின் திரி கீழிறங்கும்.

பனியை ஊடறுத்து புகைச்சுருள்கள் மேலேகும். இடையிடையே வண்டிக்காரர்கள் எழுந்து சுருட்டை பற்ற வைத்து இழுத்தபடி தீயைச்சுற்றி அமர்ந்திருப்பர்.உள்ளங்கைகளை ஜ்வாலையில் காட்டி முகத்தில் தடவிவிட்டபடி சாமத்திலும் சிரிப்பும் கேலியும் கடையைச்சூழவும் ஒளி வட்டமாய் பிரகாசிக்கும்.
வாப்புப்பா பெரிய தும்பட்டியால் தன்னை மூடிச்சுற்றிக்கொண்டு பிளேன்றியுடன் வந்து விடும் தருணங்கள் மகா அற்புதமானவை. நெருப்புக்கங்குகள் திகுதிகுவென எரியத்தொடங்கும்.

எங்கள் தேசம் - 215
ஊஞ்சல் இன்னும் ஆடும்.....

Saturday, 18 February 2012

சிறுகதை: மண் புழு

மாலையில் பள்ளிக்கூடம் விட,வீட்டுக்குள் நுழைந்தான் தம்பி.
‘டைகர்’ வாலைச்சுருட்டி கவட்டுக்குள் நுழைத்துக்கொண்டு முற்றத்தில் படுத்திருந்தது.முற்றத்து முகப்பில் வரவேற்புக்கு அமர்த்தி வைத்த ‘சைனா பொம்மை’ போல் முன்னங்காலில் மேவாயைத்தேய்த்தபடி மிகுந்த அவதானத்துடன் அதன் விழிகள் படலையின் முகப்பில்  பதிந்திருந்தன. அது படுத்திருக்கும் தோரணை தம்பிக்கு பிடித்திருந்தது.

 வானம் தலை சிலுப்பி நட்ஷத்திரங்கள் உதிர்ந்து கிடப்பதைப்போல் கச்சான் காற்றின் உக்கிரத்தில் முருங்கைப்பூக்கள் வாசலெங்கும் தூவிக்கிடந்தன. கச்சான் காற்றை கீதா டீச்சர் திட்டிக்கொண்டு போனதை தம்பி நினைத்துப்பார்த்தான். அவவின் குட்டைப்பாவாடையை சந்தியில் நின்றவர்களின் விழிகளுக்கு தூக்கி காட்டி விருந்தாக்கியதில் அவவுக்கு காற்றின் மேல் கடுப்பாய் இருந்தது.


வீடு மௌனத்துள் புதைந்திருந்தது. தம்பி முன் கதவில் கை பதித்தான். மெல்லிய முனகலுடன் அது வழிவிட்டது. மாலையிருள் விறாந்தையின் முகத்தில் முகப்பூச்சுப்புவுடராய் அப்பிக்கிடந்தது.

‘ ராத்தா……………… ராத்தோய்........

 ராத்தாவின் சிலமனில்லை. மாமரத்தில் சைக்கிள் சாத்தியிருந்தது. ‘டபிள் போக்கு’கள் பொருத்திய பழைய ‘ரெலி’ சைக்கிள். முன் ' ரிம்'  மட்டும் சற்று மட்கிப்போய்  தெரிந்தது.மச்சானின் சைக்கிள் போலவுமிருந்தது.

‘ராத்தா எங்கரிக்காய் ?’

தம்பி  சத்தம் வைத்தபடி வீடு முழுக்க சுற்றி வந்தான்.

உள்ளறையில் கட்டில் கிரீச்சிடும் சத்தம். ராத்தா படுத்து எழும்புறா போல.. தம்பி குர்ஆனை மேசையில் கிடாசி விட்டு தொப்பியைக்கழற்றி ஆணியில் கொழுவினான். உள்ளே தாழ்ப்பாள் விலகியது.

 ராத்தாவின் விழிகள் தூக்கம் கலையாத மயக்கத்தில் மிதந்தன.சேலையை தாறுமாறாக சுற்றியிருந்தா அது நழுவி நழுவி தரையில் விழுந்து சரிய தூக்கிப்பிடித்து மார்புகளை மறைத்துக்கொண்டா. “சே என்ன இவ சட்டை போடாம சேலை மட்டும் சுத்தியிருக்கா ,நித்திர வந்தா ஒன்டும் விளங்காது போல ’. 
 
தம்பி மனசுக்குள் கறுவிக்கொண்டான். செழுமையான மார்புகளின் மத்தியில் தலை புதைத்து ராத்தாவிடம் ஒண்டிக்கொண்டு தூங்குவதை  நினைத்துக்கொண்டான்.

‘என்னடாம்பி?’

அவவின் குரல் கிறக்கத்தில் ததும்பியது.

‘நான் விளயாடப்போறன்.’என்றான்.

‘சரிடா மகுரிபுக்குள்ள  வந்திடு:’

‘தம்பியிரிக்கான் விடுங்களன்’

சிணுங்கியபடி ராத்தா கதவை தாழிடுவதை தம்பி காதில் போட்டபடி பறந்தான்.


குறி பார்த்துப் பாய்வதற்கு எத்தனிக்கும் பூனைப்போல் பதுங்கிக்கொண்டு  ராத்தா முற்றத்தில் நின்றா.தெருவில் சனத்திரள் வடிந்து கொண்டிருந்தது.  அவள் விழிகள் தெருவில் அங்குமிங்கும் அலைந்து திரிந்தன. பழைய ரெலி சைக்கிள் படலையைத்தாண்டவும்  தம்பி கிறவல் ஒழுங்கையால் காரோட்டியபடி வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

சைக்கிளில் முட்டிய தம்பி  ஆளைப்பார்க்காமலே சரேலென பிறேக் போட்டு நிமிர்ந்து பார்த்தான். அந்தியில் மாமரத்தில் சாத்தியிருந்த சைக்கிளில்தான் முட்டியதை தம்பி நினைத்தபடி ஒரு பீப் போட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

ராத்தா கிணற்றடியில் குளித்து விட்டு தலையை துவாயால் சுற்றியபடி வந்தா.

“என்னடாம்பி விளயாடினியா ? என்ன நேரத்தோட வந்திட்டாய்?”என்றா.

ராத்தாவின் கண்கள் கன்றிச்சிவந்து கதீஜா மாமி வீட்டு ஜே ம் பழம் போலிருந்தது. ஜன்னல்களை சாத்தி கொளுக்கி போட்டா.ஏழு மணிக்கெல்லாம் ஜன்னல்களை சாத்திவிட வேண்டும் என்ற வாப்பாவின் கட்டளை அரங்கேறிக்கொண்டிருந்தது. அவர் இஷாவுக்கு பாங்கு சொல்ல வீட்டுக்குள் வந்து விடுவார்.

மச்சான் புகையிலை வாடிக்கு சாமான் கட்டிக்கொண்டு ஓரு மாதத்திற்கு முன்தான் கெக்கிராவைக்குப்போனார்.தம்பிதான் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் பேக்கைத் தூக்கிக்கொண்டு போனான்.

ராத்தா மச்சானிடம்  பேசவில்லை. “போய்ட்டு வாரன் புள்ள” .வாசற்படியில் நின்று மச்சான் குரல் கொடுத்த போதும் ராத்தா வெளியே வந்து அவரை வழி அனுப்பவில்லை. மச்சான் காத்திருந்து விட்டு நடையைக்கட்டினார். இவன் பின்னால் இழுபட்டு ஓடினான்.

மச்சானின் சுருட்டுப்புகை வயிற்றைக் குமட்டும். கரிக் கோச்சி போவதை போல் மச்சான் தெரு முழுக்க புகையை ஊதி விட்டபடி பஸ்சுக்கு காத்து நிற்பார்.அவரின் காவி படிந்த பற்களும் வெற்றிலை மென்று துப்பிய வாயும் பார்ப்பதற்கு வயிற்றைப்பிசையும். இன்று மாலையில் முற்றத்தில்  பார்த்த ‘ரெலி’  சைக்கிள்காரரை  நினைத்து தம்பி மனசுக்கள் அழகுபார்த்தான்.

வாப்பா சைக்கிளை தள்ளியடி வீட்டுக்குள் நுழைந்தார். ராத்தா அடுப்படியில் வேலையாக இருந்தா. அவவின் கூந்தலிருந்து  வடிந்த நீர் சொட்டுக்கள் திண்ணை முழுக்க கோலம் போட்டிருந்தன.முதுகும் பின்பகுதியும் ஈரத்தில் தகதகத்தன. நெருப்பின் நிழல் ராத்தாவின் முகத்தில் படிந்திருந்து.அவவின் முகம் தக்காளிப்பழம் போல் கனிந்திருந்தது.கள்ளச்சிரிப்புடன் புகைக்குள் ராத்தா பழுத்திருந்தா.

ராத்தா எவ்வளவு அழகு.தம்பி மனசுக்குள் ஓதியபடி  ராத்தாவின் கட்டிலில் போய் குப்புறப்படுத்தான்.சிகரெட்டின் வாசம் அறை முழுக்க கவிந்திருந்தது. தம்பி மூக்கைப்பிடித்து அதை இழுத்துப்பார்த்தான். இதமாக இருந்தது.

விழிகளை கசக்கியபடி ராத்தா வேகமாக அறைக்குள் நுழைந்தா.கையில் ஒரு பேப்பர் துண்டுமிருந்தது.கட்டிலின் அடியில் எறும்புகள் மொய்க்கத்
தொடங்கிய அதை  விரலால் நுள்ளி எடுத்து பேப்பரில் அள்ளிப்போட்டா. பரபரப்புடன் கொல்லைப்பக்கம் ஓடினா.  ஓடிய வேகத்தில் ஒரு சொட்டு தரையில் ஒழுகியது. தம்பி கால் பெரு விரலால் தேய்த்துப்பார்த்தான்.கிழிந்த போன புத்தகத்தை ஒட்டுவதற்கு காதர் ஸேர் பீச்சித்தரும்  'அற்லஸ் 'பசை போலிருந்தது.

‘என்ன ராத்தோய் இது ‘ ? 

தம்பியின் உதடுகள் அருவருப்பாய் நெளிந்தன.ராத்தாவின் முகம் மஞ்சளித்துக்கனிந்ததை தம்பி முன்னெப்பேதும் கண்டதே இல்லை. புன்னகையின் ஈரம் சொட்டச்சொட்ட ராத்தாவின் அதரங்கள் துடித்தன.

‘அது மண் புழுவின்ர எச்சம்டா’என்றா. தம்பி எதுவும் புரியாமல் பேவென விழித்துக்கொண்டிருந்தான். 
 
தம்பின் பிருஷ்டத்தில் ராத்தா செல்லமாகத்தட்டினா. ஓர விழிகளால் அவனைப் பார்த்தா. அவவின் விழிகளுள் ஓராயிரம் மின்மினிகள் சிறகடிப்பதை அவன் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

30.09.09

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...