எஸ்.எல்.எம். ஹனீபாவின் முக நூல் பக்கத்திலிருந்து ....
கடந்துபோன சென்னைப் புத்தக சந்தையில் காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளிவந்த ஓட்டமாவடி அறபாத் அவர்களின் “நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்” பற்றிய ஒரு சிறு குறிப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் பத்தி எழுத்துக்களின் தொகுதி. அறபாத் நூலின் முன்னுரையில் சொல்வது போல உசுக்குட்டிப் பருவத்து நினைவுகளை மீட்டிப் பார்க்கும் அழகிய காட்சிப் படிமங்கள்.
நினைவுகளில் தேங்கி நிற்கும் ஒரு சொட்டு நீரும் திரும்பிப் பார்க்கையில் என்னமாய் தக தகவென ஜொலிக்கின்றது.
கிடுகு வேயப்பட்ட முகடு, முற்றத்தில் பெரிய மாமரம், சற்றுத் தொலைவில் கிணறு, கிணற்றைச் சூழவும் கமுகு மரங்கள், தண்ணீரள்ளத் துலா, வீட்டைச் சுற்றி அடைக்கப்பட்ட கிடுகு வேலி, அக்கம்பக்கம் சாச்சிமார்களும், மூத்தம்மாமாரும், ஒவ்வொரு வீட்டுக்கும் போய்வர கோடியில் ஒரு நுழைவுவாயில், இது அறபாத்தின் வாக்குமூலம்.
தனது எழுத்துக்கள் மூலம் படிப்பவர் மனதில் பரவசத்தையும், தங்களின் இளமைப்பருவத்தின் மறக்கமுடியாத நினைவுகளையும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் பிரவாகமாக ஓடச் செய்திருக்கிறார். அவரின் அனுபவங்கள் நமது அனுபவங்களாகி நமது மனசும் அவரின் எழுத்துக்களோடு அள்ளுன்டு போகிறது.
1996 “எரிநெருப்பிலிருந்து” எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் அறிமுகமான அறபாத் 20 வருட எழுத்தூழியத்தின் மூலம் தன்னை சிறப்பாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.
கதை, கவிதை, விமர்சனம், பத்தி எழுத்துக்கள் என்று 11 நூல்களின் சொந்தக்காரர். தனது படைப்புக்களுக்கு மாகாண, தேசிய ரீதியிலும் பல விருதுகளைப் பெற்றவர்.
அறபாத்தின் ஒவ்வொரு காலடிமண்ணின் ஈரமும், வாசனையும் ஒவ்வொரு பத்தியிலும் கண்சிமிட்டி களிப்பூட்டுகிறது.
நூலிலிருந்து ஒரு பத்தி...
ரணிலும், பிரபாகரனும் சமாதானம் செய்து கொண்ட பின் வெடிச் சத்தங்கள் தற்காலிகமாக ஓய்ந்திருந்தன. இலங்கை ஆர்மியுடன் தான் சண்டையை நிறுத்தினார்கள் புலிகள். கிழக்கு முஸ்லிம்களோ இக்காலத்தில் தான் அதிகம் இழப்புக்களை எதிர்கொண்டனர். ஆட்கடத்தல், கப்பம் பெறல், கொலை, கொள்ளை என புலிகள் சமாதானத்தை முஸ்லிம்களுக்கு எதிரான போராயுதமாக பயன்படுத்திக் கொண்டனர்.
வாழைச்சேனையிலிருந்து கல்குடா, கல்மடு போன்ற இடங்களுக்கு சமையலுக்கு சென்ற இரு முஸ்லிம்களை (ஹயாத்து முஹம்மது அய்னுத்தீன், ஹயாத்து முஹம்மது ஜனூஸ்தீன் ஆகிய இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்) கொலை செய்து (2002 ஜுன் 27ம் திகதி) ஜனாஸாவை (உடலம்) இராணும், பொலிஸார், சட்டத்தரணிகள், நீதிபதி முன்னிலையில் எரித்து சாம்பலாக்கிய நெஞ்சை உறைய வைத்த கொடூர நிகழ்வும் இக்காலத்தில்தான் நடந்தது.
அறபாத் நூலில் தமிழ், முஸ்லிம் உறவு, புலிகளுடனான தனக்குள்ள அந்நியோனியம், புலிகளை வெறுத்த தருணங்கள் என்று ஒரு கழைக்கூத்தாடியின் நிதானத்துடனும் பக்கசார்பின்றியும் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நூலைக்கூட தனது உயிரைப்பாதுகாத்து வழியனுப்பி வைத்த திருகோணமலை மறை மாவட்ட குரு முதல்வர் வண. T. கிங்ஸ்லி றொபர்ட் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை - ரூ. 180