மனைவி
நாங்கள் வெளியே போகத்தயாராகிக்கொண்டிருந்தோம். பிள்ளைகள் இரண்டும் ஆளுக்கொரு திணுசில் உடுத்திக்கொண்டு கட்டவிழும் தருணத்திற்கென திமிறிக்கொண்டிருந்தார்கள். கண்ணாடியும் அவளும் அத்வைதமாகி அவள் அதுவாகி அதுவும் அவளாகி மருகி நிற்கும் காட்சி நிலைப்படியில் நின்ற என் விழிகளில் விழுந்தது.
கொசுவ மடிப்புகள் இடையில் எடுப்பாக விழவில்லை என்பதற்காக சாரியை உருவி கைகளால் அபிநயம் பிடித்து மறுகாவும் கொசுவிக்கொண்டிருந்தாள். மூடப்படாத மார்புகள் ரவிக்கையின் இறுக்கத்தில் வெளியே குதித்துவிடுவேன் என எகிறி வந்து பாவ்லா காட்டியது. இடை மடிப்பின் அழகும் லைலாவின் பின்னழகும் சேர்ந்து கண்ணாடி வழியே என்னை போதையூட்டின.
ஞாயிற்றுக்கிழமைகளில் பீச்சுக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்ற குழந்தைகளின் அடம்பிடித்தலுக்குப்பணிந்துதான் இந்த ஏற்பாடெல்லாம் செய்து கொண்டிருந்தோம்.
திறந்திருந்த சாளரத்தின் வழியே குபு குபுவென காற்று வழிந்தது மூன்றாவது மாடியில் குடியிருக்கும் எங்களுக்கு இது கடவுளின் மேலதிக அநுக்கிரகம்.
எங்களது பக்கத்து அனெக்ஸில் திடீரென குரல்கள் முளைத்திருந்ததை இந்தப் “புறப்படுதல்” அமர்க்களத்திலும் அவதானித்தேன். நறுவிசாக ஒரு பெண்ணின் குரல், அதற்கு முற்றிலும் எதிர்க்கோணத்தில் கரடு முரடான ஒரு ஆணின் குரல்.
நான் கதவை திறந்து விட்டேன். குழந்தைகள் ஹாய் என்று கத்தியபடி படியிறங்கிப்போனார்கள். எனக்கெதிரே ஒருவன் நின்று கொண்டிருந்தான். முழங்காலிடை நீண்டிருந்த அவன் ஆடை அழுக்கேறியிருந்தது. கண்கள் கரு நீலமாகவும் உதடுகள் தடித்தும் தலைவிரிகோலத்தில் அவன் அனெக்ஸ் முன்றலில் நின்று கொண்டிருந்தான். என்னைக்கண்டதும் ஸலாம் கூறி கையை நீட்டினான். நானும் கைகளை நீட்டி குலுக்கிக்கொண்டேன் .
அவன் தேகத்தில் ஊறிய வியர்வை முகத்தில் அடித்து வயிற்றைக்குமட்டியது. அனெக்ஸ் முற்றம் நிறைய தாறுமாறாக பொருட்கள் இறைந்து கிடந்தன.
ஆங்கிலத்தில் சுமாரான அறிவிருந்தது. அவன் பெயர் அப்துல்லாஹ் என்றான் சூடான்காரன் உள்நாட்டு யுத்தத்தால் இடம் பெயர்ந்து சவூதிக்கு வந்தவனை இலங்கையன் ஒருவன் ஏஜென்சியில் வேலைக்கு சேர்த்துவிட்டதாக சொன்னான்.
எங்களது உரையாடல் கேட்டு உள்ளறைக்குள்ளிலிருந்து ஒரு முகம் திடீரென வெளிப்பட்டு அதே வேகத்தில் உள்ளே மறைந்தது. அழகான கவர்ச்சியான முகம். மின்னலைப்போல் வந்த மாத்திரத்திலேயே தன் அழகையும் ஒளிர்வையும் வாசலில் உமிழ்ந்து விட்டுச்சென்றது. சூடான்காரனின் மனைவிதான். அக்கணத்தில் பார்த்த அவள் முகத்தில் துயரத்தின் நிழல் படிந்திருந்தது.
“லைலா கண்ணாடியை விழுங்காம வா! பிள்ளங்க கீழ பெய்த்தாங்க” உள்ளே பார்த்து குரல் வைத்தேன். சற்று நாழிகைக்குப்பின் அவள் உதடுகளை சுழித்து பழிப்புக்காட்டியபடி வந்தாள்.
என்னிடம் சாவியை திணித்து உள்ளங்கையில் நிமிண்டிவிட்டு படியிறங்கிப்போனாள். அவள் விட்டுச்சென்ற வாசம் வீடு கொள்ளாமல் வெறியுடன் வெளியேறி என் நாசியில் நிறைந்து கிறங்கடித்தது.
உள்ளே ஒரு தரம் ஜன்னல் கதவுகளை சரிபார்த்து தாழ்ப்பாளிட்டேன்.வெளிக்கதவை மூடிக்கொண்டு கிளம்பும் தருணம் அனிச்சையாக முன் அனெக்சின் உள்ளறை ஜன்னல் திறந்திருப்பதை கவனித்தேன்.
நிலவு தோகைவிரித்து மஞ்சத்தில் கிறங்கிக்கிடப்பதைப்போல் அவன் மனைவி கட்டிலில் சரிந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். பர்தா திரை விலகிக்கிடந்தது. அவள் முகம் இன்னும் மிகத்துலாம்பரமாக பிரகாசித்தது.
முழங்கால் வரை ஏறிய துணியை விலத்த மனமின்றி அவள் சயனத்திலிருந்தாள் மயிர்கள் அற்ற உறுதியான வெள்ளைப்பாதங்கள். உருண்டு திரண்டு தந்தம்போல் அசைவற்றுக்கிடந்தன.
அழகிய அவள் முகம் நித்திய கவலையில் துய்த்திருந்தது.அந்த அழகில் இனம் புரியாத ஏக்கம் துருத்திக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். சூடானியன் உள்ளே அலுவலாக இருக்கின்றான் போல், சாமான்களை ஒழுங்குபடுத்தும் சப்தம் கேட்டது
2
வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது.பாதி நனைந்தபடி அலுவலக வேனில் வந்து இறங்கினேன். எங்களது அனெக்ஸ் கதவு விரிந்து கிடந்தது. சப்தம் காட்டாமல் அறைக்குள் சென்றேன்.
சமையலறைக்குள் லைலாவின் சிரிப்பொலி கேட்டது. பிள்ளைகளுடன் விளையாடுவாள் அதற்காக இப்படி கதவைத்திறந்து கொண்டா. கோபத்துடன் அடுத்த அறைக்குள் சென்றேன். பிள்ளைகள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
லைலா என்றேன் காட்டமாக. “இதோ வாரன்“ என்றவளின் குரலுடன் புதிய குரல் ஒன்றும் இணைந்து வந்தது.
“அவங்க வந்துட்டாங்க போல அப்ப நான் நாளைக்கு வாரன் “
கலவரத்துடன் அந்தக்குரலுக்குரியவள் திடுதிப்பென வேகமாக மறைந்து சென்றாள்.
முகமெல்லாம் பூச்சொரிய லைலா என்னெதிரே நின்றாள். அவள் முகத்தை சுண்டியபடி “அய்ட்டம் “ யாரென்றேன்.
“சும்மா பகிடி பண்ணாதீங்க பாவம் அந்தப்புள்ள,அவதான் அந்த சூடான்ட வொய்ப், 18 வயசுதான். அழகு இருந்து என்ன செய்ய அதுவே அவளுக்கு ஆபத்தாகி விட்டது “.
லைலா அவன் மனைவியின் புராணம் பாடத்தொடங்கி விட்டாள். “ரிங்கோவில ஏதோ ஒரு ஊரு சொல்லிச்சி, வாப்பா இல்லியாம் நாலு குமருகளாம் இவ மூத்தவ, வெளிநாடு போகப்போனவள அங்கு வேல செஞ்ச இவன் பார்த்தானாம், மத்த குமருகளுக்கு வீடு கட்டித்தாரன் இவள இவனுக்கு கட்டித்தரச்சொல்லி கேட்டிருக்கான் “
“ உம்மாக்காரி சரியென்டுட்டாள். இவள் எவ்வளவோ கெஞ்சி அழுது பார்த்திருக்காள் தங்கச்சிமார நெனச்சிப்பாருண்டு உம்மா இவள அவனுக்கு கட்டி வச்சிட்டாளாம் “.
“அவனும் பெருந்தொகை பணம் கொடுத்து தங்க்ச்சிமார கரையேத்த உதவி செஞ்சானாம். “
“இவள எங்கயும் வெளியில கூட்டிப்போகமாட்டானாம் அப்படி போரண்டாலும் முகத் மூடனுமாம் யாரடோயும் பேசப்படாதாம் பொம்புளயளோடயும் பேச வுடமாட்டானாம் “.
“ எல்லாம் அறைக்குள்ளதானாம். அவன்ட ஒபிசிஸில வேல பார்க்கற ஒரு பையன் இருக்கானாம் அவனுக்கிட்ட மட்டும்தான் கறி வாங்கி அனுப்புவானாம். அதுவும் ஜன்னலத்துறந்து சாமான வாங்கிட்டு அனுப்பிடனுமாம். “
“அந்தப்புள்ள சொல்ரதப்பார்த்தா பாவமா இரிக்கி இப்பயும் அவனுக்கு தெரியாமத்தான் வந்துட்டு போவுது. இவன் வெளியூர் போய்ட்டனாம் “.
லைலாவின் முகம் இருண்டு வருவதை கவனித்த நான் அவளை அநாயசமாக அணைத்தபடி
“ இப்பயாச்சும் ஐயாவோட அரும விளங்கினாச்சரி “ என்றேன்.
அவள் என் அணைப்பிலிருந்து விடுபட்டு, க்கூம் என மறுகியபடி சமையலைறைக்குள் நுழைந்தாள்.
3
இப்படித்தான் ஒரு நாள் பாத் றூமில் ஒரு பிராவும் உள்ளாடையும் ஈரம் சொட்டச்சொட்ட தொங்கியது. அலுவலகத்திலிருந்து வந்த நான் முகம் கழுவப்போன சமயத்தில் இதைக்கவனித்தேன். லைலா இப்படியெல்லாம் போட மாட்டாளே. லைலா இது வெல்லாம் என்ன என்றேன் .
“ ச்சு இது என்ட இல்ல பக்கத்துல சூடான்காரன்ட அவட“ . என்றவளின் முகத்தில் செம்மை படர்ந்தது. “
“அவன் இதயெல்லாம் போட வுடமாட்டானாம் போட்டாலும் கழுவி அவன் கண்ணுல படுகுறமாதிரி போடப்போடாதாம். அதான் இஞ்ச வந்து கழுவினா நீங்க வாரதப்பார்த்ததும் ஓடியிருப்பா “.
சூடான் நாட்டுக்காரன் எங்களண்டை வந்து இரண்டு மாதம் இருக்காது. அகஸ்மாத்தமாக சந்திக்கும் வாய்ப்புகள் வாய்த்தன. ஒரு ஸலாத்துடன் உறவை துண்டித்துவிடுவேன். இந்த இடைவெளிக்குள் அவன் மனைவியின் அழுகை சத்தம் அடிக்கடி என்னை சங்கடப்படுத்தியது.
இரவில் பகலில், சில நேரம் மாலை நேரங்களில் அவளின் விசும்பல்கள் என்னை கலவரப்படுத்தின. ஏனென்று அவனை கேட்கவும் அச்சம். ஏனெனில் அவன் ஒரு முரடனாய் இருந்தான் எதற்கு வம்பு என்று காதுகளை மூடிக்கொண்டு இருக்க பழகிவிட்டேன்.
என் மனைவியிடம் பேசுவதை எப்படியோ அறிந்து கொண்ட சூடானியன் அவளை உள்ளே வைத்து மூடி விட்டு சாவியை தன்னுடன் எடுத்துச்சென்றான்.
அவனது பாஷை கூட இவளுக்கு சரியாக தெரியாது. கணவன் மனைவியருக்கிடையில் இருக்கும் ஊடல் சிணுங்கள், நையாண்டிப்பேச்சுகள், படுக்கயறை இரகசியங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் அவள் சுவர்களிடம் மட்டும்தான் பேசலாம் .காமக்கிளர்வில் குறும்பு பேசுவதற்கென அவளுக்கு துணையாக இருப்பது இரண்டு குருவிகள்தான் அதுவும் அவள் சமையலறையில் கூடு கட்டி வாசம் செய்கின்றன.
கதையோடு கதையாக இதையெல்லாம் என் லைலாவிடம் சொல்லி அழுதிருக்கின்றாள். நீக்ரோ வெளியே சென்று விட்டு வரும்போதெல்லாம் அவளை புனர்வது வழக்கமாம். அவள் உணர்ச்சிகள் பற்றி அவனுக்கு அக்கரையில்லை.
“நூறு நூநு போர்க்குதிரைகள் எதிரொலிக்கக் கணைத்தபடி ஃ நிலம் உடைத்துப்பெயர்கின்றன.
பின் கழுத்தில் புதைந்து மோகிக்கும் வெப்பத்தில் ஃ கலச்சுவர்கள் வெடிக்கின்றன…..
மயிர்க்குழாய்கள் புடைக்கின்றன….உயிரணுக்கள் இரைகின்றன.
திமிறுகின்ற பேராறு மலைகளைத் தகர்க்கின்றது
அலறியடித்துக்கலைகின்றன இராட்சதப்பறவைகள்
மாரிடை ஃ தொப்புள் நடு ஃஇடைவழியே சீறிப்பிரவகித்து பாய்ந்து ஓய்கிறது பாற்கடல்.
பிளந்திருந்த பாறைகளில் ஃ மதர்த்திரந்த புற்களின் மேல் குளிர்கிறது சூரியன்…
பேரமைதி ஃகடல் ஓய்ந்துஃ மலை அடங்கி ஃஉடல் அயர்ந்து பேரமைதி.ஃ
நீ அப்போது ஃகோடியில் ஒரு பூவாய் மலர்ந்திருந்தாய்.. “
என்.ஆத்மாவின் கவிதையில் வரும் அந்த அந்தர முயக்கம் போன்றல்லாவிடினும் மிகச்சாதாரணமாய் கூட அவன் அவளை இன்பத்தின் படித்துறைக்கு அழைத்து வரத்தயாரில்லை .
சூடான் அவளை அலாக்காக தூக்கி சுவரில் சரித்துக்கொண்டு புனர்வானாம். சில நேரம் சமைத்துக்கொண்டிருக்கும் போது சமையலறை மேசையில் மல்லாக்கப்போட்டு சிதைப்பானாம்.
கள்வன் போல் பதுங்கி வந்து அவள் உறங்கும் தருணம் பார்த்து உறவு வைத்துக்கொள்ளவும் செய்வானாம். படுக்கையில் அசையாமல் உறைந்திருக்கும் அவள், தன் மேல் கவிந்திருக்கும் அவனின் காவி படிந்த பற்களின் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு குமைந்து அழுதிருக்கின்றாள் .
ஜன்னல்களையும் மூடி கதவையும் இறுக அடைத்த விட்டு செல்லும் நீக்ரோவின் மேல் நான் கடுப்பாய் இருந்தேன். அவனை பழிவாங்க தக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் முறைப்பை புரிந்து கொண்டவன் போல் அவனும் பதிலுக்கு முகத்தை தொங்க போட்டவாறு என்னைக்கடந்து செல்வான்.
மூன்று மாதங்கள் கடந்திருக்கும். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் நாழிகையில் சூடானை வழியில் பார்த்தேன். அவன் பின்னால் அவள் சென்று கொண்டிருந்தாள். வெளிக்காற்றை சுவாசித்த உற்சாகம் அவளில் கரை புரண்டதாக தெரியவில்லை கால்லை இழுத்து இழுத்து விந்தி விந்தி நடந்து வந்தாள்.
மூடிய முகத்திரைக்குப்பின் சலனமற்ற இரு விழிகள் என்னை ஊடுருவி தாக்கின. ஏக்கம் நிறைந்த பரிதாபத்திற்குரிய அந்த விழிகளின் இறைஞ்சுதல் என்னை சுட்டெரித்தது.
என்னை எப்படியாவது இந்த மிருகத்திடமிருந்து விடுதலை செய்யுங்கள் என்ற கெஞ்சல் அது. குறைந்தது அவனின் அடாச்செயல்களை தட்டிக்கேளுங்கள் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்ற நப்பாசையின் வெளிப்பாடாக அந்தப்பார்வை.
பூசாரியின் பின்னால் இழுபட்டு போகும் பலியாடாக அவள் போய்க்கொண்டிருந்தாள். இவனுக்கு பெண் கொடுத்த இலங்கைத்தாய் மீது சினமேறியது.
வீட்டுக்குள் நுழைந்ததும் லைலாவின் வீங்கிய முகம் என்னை வரவேற்றது. விபரீத கற்பனைகள். ஒரு கணத்தில் தேகம் அதிர ஆடிப்போனேன். ஆதுரமாய் அவள் தலையை கோதியபடி “ என்னம்மா“ என்றேன்.
“அவள் எதிர் வீட்டைக்காட்டி அவளுக்கு இன்று அபேஷன் ஆகிவிட்டது. அந்த கருத்த நாய் அடிவயிற்றில் உதைத்தானாம் “.
இந்த அபார்ட்மென்ட அதிரும்படி அவள் கூக்குரலிட்டாள். துடியாய் துடித்தாள் .
“இரத்தம் கசியும் ஆடையை அள்ளிக்கொண்டு என்னிடம்தான் ஓடி வந்தாள். அந்த நாய் அவள் முடியை கொத்தாகப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான்.
ஆஸ்பத்திரிக்கு போகப்போவதாக “ஹொஸ்பிடல் ஹொஸ்பிடல் “ என்று என்னைப்பார்த்து கூவி விட்டு இவளை இழுத்துப்போனான்.
அவளோவெனில் “ என் புள்ள, என் புள்ள“ எனப்பினாத்தியபடி இரத்தம் தோய்ந்த உள்ளாடையை பார்த்தபடி கதறிச்சென்றாள்.
“ பாவம் எந்தப்பொண்ணுக்கும் இப்படி வரப்படாது“.
நான் லைலாவின் மனம் பேதலிப்பதை உணர்ந்தேன். இச்சம்பவத்திற்குப்பின் நீக்ரோ எனது அயலானாக இருக்கப்படாது என உறுதி பூண்டேன் அனெக்ஸ் கொடுத்த கம்பனிக்காரர்களுக்கும் அவனில் திருப்தி இல்லை. இதையும் காரணம் காட்டி சூடானியனை இரண்டு நாளைக்குப்பின் வேறிடத்திற்கு பெட்டிகட்டவைத்துவிட்டேன்.
சில காலம் லைலா அவள் நினைவாகவே புலம்பிக்கொண்டிருந்தாள். படுக்கயறை வரை அவள் புலம்பல் தொடர்ந்து பின் திடீரென நின்றும் விட்டது. காலம் என்ற மருத்துவன் மனக்காயங்களுக்கு மருந்து போட்டு ஆற்றுவதில் வல்லவன் என்பதை லைலாவுக்கும் நிரூபித்துக்காட்டினான்.
எனினும் நான் மன உபாதைகளிலிருந்து தப்பிக்க எத்தனித்துக்கொண்டிருந்தேன். மனசின் இரகசிய அறைகளில் அந்தக்கண்கள் ஒட்டிக்கொண்டு என்னை பயமுறுத்தின. ஓரு பெண்ணின் அபயக்குரல் என் கனவுகளை கட்டிப்போட்டுப்பயமுறுத்தியது.
அனெக்ஸில் நுழையும் காற்றுமுழுக்க அந்தக்குரலை காவியபடி அலைவதான பிரேமை என் தூக்கத்தை கலைத்தது. அவளின் அந்திமப்பார்வையும் அவனின் பின்னால் இழுபட்டுச்சென்ற அவளின் பரிதாப தோற்றமும் என் நினைவின் கடைக்கோடி வரை எகிறி வந்து சித்திரவதை செய்தது.
காற்றைக்கூட சுவாசிக்க முடியாமல் அடைத்து வைத்து என்னெதிரே ஒரு உயிரை கொன்றுள்ள பாவியை நான் சும்மா விட்டிருக்கின்றேன் என்பதை நினைக்கும் போது என் விலா எலும்பு ஒடுங்கியது.
எங்கள் விலா எலும்புகளை காப்பாற்றவியலா என் கோழை மனசை காறி உமிழ்ந்து தன் கால்களின் கீழ் மிதித்து விட்டுச்சென்ற அவள் விழிகளின் ஏளனத்தை என்னால் பொறுக்க முடியவி;ல்லை. இந்த மன அவசம் எத்துனை காலம் என்னை துன்புறது;தியதோ நானறியேன்.
4
ஓரு இளவேனிற்காலம். இயற்கை எழில் கொஞ்சும் கண்டி நகருக்கு அலுவலக நிமித்தம் சென்றிருந்தேன். எனது தங்குமிடம் வழக்கம் போல் ரிவசைட் ஹோட்டலில் புக்காகி இருந்தது.
மாலையில் உலா போகும் எண்ணத்தில் தெப்பக்குளப்பக்கம் நடக்கவாரம்பித்தேன். முன்பு போல் லேக்சைட் அமைதியாக இல்லை.ஜனப்பிரளம் இதற்குள் யாரை விலத்தி எப்படி நடந்து சமாளிப்பது. பேசாமல் நடக்கும் நிய்யத்தை கைவிட்டு விட்டு சீமென்ட பெஞ்சில் அமர்ந்து குளத்தை அளக்கத்தொடங்கினேன்.
கரையோரம் துள்ளித்துள்ளி விளையாடும் மீன் கும்பல்களின் மேல் ஆசை ஆசையாய் வந்தது. நன்கு கொளுத்த மீன்கள். தூண்டிலும் வலையும் ஸ்பரிக்காமல் புத்தனின் காருண்யத்தில் மதர்த்த அவைகளின் திமிறை அடக்க வேண்டும் என்ற என் வேட்டைப் புத்தி மேலெழுந்தது .
சுற்றும் முற்றும் பார்த்துப்பார்த்து அலுத்த கண்கள் எதேச்சையாக வலது புற பெஞ் பக்கம் சென்றதும் நிலை குத்தி நின்று விட்டது.
சிமென்ட பெஞ்சில் ஒரு ஜோடி உல்லாசமாக இருந்தது. அந்தப்பெண் அவன் காதண்டை குசுகுசுக்க அவன் அவள் மொன்னியைத்திருகி செல்லமாக கடிந்து கொண்டிருந்தான்.
.அவளின் முகத்தில் பட்டுத்தெறித்த மாலைச்சூரியனின் கதிர்கள் அவளுடைய அழகிய முகத்தை மேலும் மெருகூட்டிக்காட்டியது. நெடு நேரம் அவர்களை பர்த்திருக்கவும் முடியவில்லை. லஜ்ஜையாக இருந்தது.
குளத்தையே வெறித்தபடி அந்த ஜோடியை நினைவுக்கு கொண்டு வர பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருந்தேன் . தண்ணீரில் தெரிந்த பிம்பத்தில் என்னருகே ஒரு உருவம் நிற்பதைக்கண்டு திடுக்கிட்டு திரும்பினேன்.
சற்றைக்கு முன் பெஞ்சில் அந்தப்பென்னுடன் காதல் கவிதை படித்துக்கொண்டிருந்தவன். என்னைபார்த்து முறுவலித்தபடி
“ஹலோ சேர் என்னத்தெரியலியா, நீங்க எப்படி இஞ்ச? “
என் குழப்பங்களில் கல்லெறிந்து விட்டு, அவன்; உதடுகளில் புன்னகையை உலரவிடாமல் பிடித்துக்கொண்டிருந்தான்.
“ஓபிஸ் விஷயமா இங்கு வந்தனான். தம்பி உங்கள் நல்லா பரிச்சயம் ஆனா எங்கயன்டு இப்ப பல வருஷமிருக்குமி;ல்லயா? “
நான் தடுமாறினேன்.
“ஓம் சேர் பல வருஷங்கள்தான், உங்கட அனெக்சுக்கு பக்கத்தில ஒரு சூடான்காரன் இருந்தான் தெரியுமா“?
மர்ம முடிச்சுக்கள் அவிழ்ந்து தறிகெட்டு ஓடத்தொடங்கியது.
சூடானின் வீட்;டுக்கு வரும் அவனின் நம்பிக்கைக்குறிய ஊழியன். அப்படியெனில் அவள் ? சே அவளாக இருக்காது .அவள் நிச்சயம் அவனின் இம்சை தாங்கேலாமல் ஒரு புனர்பொழுதில் செத்துப்போயிருப்பாள்.
“தம்பி கலியாணம் கட்டிட்டிங்க போல“.
“ ஓம் சேர் இப்ப ரெண்டு புள்ளயும் இருக்கு, பொண்ணும் ஒங்களக்கு தெரிந்தவதான் “
“எனக்கு தெரிந்தவளா? “வியப்பில் விழிகள் அகன்று விரிந்தன.
“ஓம் சேர். “
“அந்த சூடாகாரனின் மனைவிதான் “
இப்போது அவளை கூர்ந்து பார்த்தேன் அதே விழிகள்.ஏக்கமுடன் மேவி என்னைப்பார்த்த அந்த விழகளா இது தடுமாறிப்போனேன்.
நழுவி குளத்தில் விழுந்து அமிழ்ந்து போனேன்.சர்வாங்கமும் ஒடுங்க உடல் சிறுத்து குறுகியது. அவமானத்தால் குனிந்தபடி குளத்தை வெறித்துக்கிடந்தேன். அவன் மகிழ்ச்சியில் சொல்லிக்கொண்டு போனான்
“ஒரு நாள் சாமான்கள் கொடுக்க என்ன அனெக்சிக்கு அனுப்பினான் சேர் இவ என் கைய பிடிச்சி அழுதா என்னய காப்பாத்தி அவட ஊருக்கு கொண்டு போய் விடச்சொன்னா. “
“இல்லாட்டி தற்கொலை செய்வேன் என அடம்பிடித்தா வேறு வழி இல்ல அவட பரிதாப கதயக்கேட்டன் வாழ்வு கொடுத்தன் எல்லாம் சட்டப்டிதான் சேர். “
அவன் எனக்கு முன்னே நீண்டு போய் ஆகாசத்தை தொட்டு நின்றான்
தண்ணீரின் பிம்பத்தில் அவளின் நடை அசைந்து, என் திசைநாடி வந்தது. நீக்ரோவின் இரும்புப்பிடியிலிருந்து விடுதலைப்பெற்ற மிடுக்கு நடை. என்னுடன் பேசப்போகிறாள்.
அல்லது நான் நாக்கைபிடிங்கிக்கொள்ளுமளவிற்கு கேள்வி கேட்கப்போகிறாள். அன்று நான் கதறக்கதற கூச்சலிட்டும் என்னை ஏன் நீங்கள் காப்பாற்றமுன்வரவில்லை என்ற கேள்வியுடன் என் முகத்தை வெறுப்புடன் நோக்கப்போகிறாள் என்றெல்லாம் கற்பனித்தபடி நீருக்குள் ஆடும் அவள் உருவத்தை வெறித்தபடி உறைந்திருந்தேன்.
.அவள் கணவனின் கையைப்பிடித்து
“வாங்க போவம்,“மஃரிபாயிட்டு“ என்றவள் அவனை இழுத்துக்கொண்டு போனாள்.
அவன் சங்கோஜமாக அவளை இழுத்தபடி
“ஹமீதா சேர தெரியுமா இவங்கட பக்கத்து அனெக்ஸிலதான் நீங்க ஆரம்பத்துல இருந்திங்க. “ அவன் அறிமுகம் தேவயில்லை என்பது போல் அவளின் குரலில் அந்த ஏளனமும் அலட்சியமும் வெளிப்பட்டது.
“ஓ தெரியுமே ! “
09.10.2005 இரவு 7.45
பிரசுரம் வீரகேசரி டிசம்பர்
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.