தொடர்- 47
இலங்கையின் கொடூர யுத்தத்தில் செத்து மடிந்த,அல்லது பாதிப்படைந்த தமிழ் முஸ்லிம்களின் உள்ளக்குமுரல்களின் தொகுப்பாக அந்த தொகுதி வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.என்னை இந்த அளவிற்கு எழுத தூண்டிய எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவுக்கு அதனை சமர்ப்பித்திருந்தேன்.
ஏரி நெருப்பிலிருந்து நூல் வெளியீட்டு விழாவுக்கு இலக்கிய ஜாம்பவான்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். குறிப்பாக பேராசிரியர் .கா.சிவத்தம்பி ஐயா, செ.யோகராசா,சித்திரலேகா மௌனகுரு போன்ற ஆளுமைகளின் பிரசன்னத்துடன் அந்த விழா ஓட்டமாவடி பாளிகா பெண்கள் கல்லூரியில் 1996 அக்ரோபர் மாதத்தில் நடைபெற்ற இனிய கணங்களை நினைத்துப்பார்க்கின்றேன்.
பின்னர் யாழ்ப்பாணத்திலும் சில இலக்கிய நண்பர்கள் எரி நெருப்பிலிருந்து கவிதைத்தொகுதியை அறிமுகம் செய்தார்கள். நான் கலந்து கொள்ள வில்லை. அதற்குரிய காலமுமாக அது இருக்கவில்லை. அரூஸால் ஏமாற்றப்பட்டவர்கள் பிற்காலத்தில் நிறையப் புத்தகங்களை போட்டிருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இப்போது முதல் போட்ட தொகுதியை பார்க்கின்றபோது அச்சுக்கலையும் புத்த ஆக்கப்பணியும் கண்டுள்ள அசுர வளர்ச்சி மலைக்க வைக்கின்றது.கடைசியாக வெளிவந்த (2008) எனது சிறுகதை தொகுதியான ‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ‘ தமிழ்நாட்டில் அடையாளம் பதிப்பகம் போட்டது.
ஒரு சதமேனும் எனக்கு செலவில்லாமல் இலாபமாய் வந்த தொகுதி. தொகுதிக்கான தலைப்பை நண்பர்களிடம் கலந்துரையாடியபோது ‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருதி ‘ என்று அனார் சொன்னார்.அதுவே பொருத்தமானதாக இருந்தது. அப்படித்தான் டைப்செய்து மெயில் பண்ணினேன்.கடைசியில் ‘குருதி; ‘ ‘குருவி ‘ யாக மறுவி வந்து சேர்ந்து. அதுவும் கதைகளுக்கு பொருந்தி வருகின்றது என்பதால் பேசாமல் விட்டு விட்டோம்.
முதல் தொகுதி போடுவதில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்துக்கொண்டு பிற்காலத்தில் ஏனைய தொகுதிகளை மிக சிறப்பாகவும் நுணுக்கமாகவும் செய்து முடித்தேன். அச்சுக்கலையின் நெளிவு சுளிவுகளை இலேசில் கற்றக்கொள்ளவும், பிறரின் புத்தகங்ககளை அழகுற அச்சிடவும் இயலுமான அனுபவத்தை இந்த துறை எனக்கு கற்றுத்தந்தது.
எனது இரண்டாவது நூல் ‘தப்லீக் அன்றும் இன்றும் - பாகம் 01 .என் எழுத்துலக வாழ்வில் கசப்பான அனுபவங்களையும் உயிர் அச்சுறுத்தலையும் எதிர் கொள்ள வைத்த புத்தகம்.
இதனை கொழும்பில் அச்சிட்டேன். அச்சகம் செல்லாமல் ஆலோசனைகளை கொடுத்து ஒரு அறையில் இருந்தபடி மிக இரகசியமாக வெளிவந்த நூல். நூலின் கருத்துக்கள் நடுநிலைமையாக இருந்தாலும் அதனை ஜீரணித்துக்கொள்ளாத ஒரு சிலரின் வன் முறை கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மிக மோசமாக விளைவுகளை ஏற்படுத்தியது.
எனது தலைக்கு பத்து இலட்சங்கள் விலைபேசப்படுகின்ற அளவிற்கு அந்த புத்தகத்தில் எதுவும் இல்லை என்பது நாடறிந்த விடயம்.என்றாலும் கம்பஹா மாவட்டத்தில் ஒரு ஜீம்ஆப்பள்ளிவாயலுக்கு முன் நின்று கொண்டு ஒருவர் ‘இந்த புத்தகத்தை எழுதியவரின் தலையை கொண்டு வந்தால் பத்து இலட்சம் தருவேன்’ என்ற பகிரங்கமாக கூறும் அளவிற்கு எனது தலைக்குள் என்ன தங்கமா தேங்கி நின்றது.
சிந்தித்துப்பார்க்கையில் இந்த சமூகத்தின் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கும் பக்குவம் பற்றி இப்போதும் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. தன்னை ஒருவன் விமர்சிக்கும் போது அதனை உள்வாங்கி சீர்திருத்தம் பெறும் மனப்பாங்கு என்பது எளிதில் வாய்த்து விடுவதில்லை. மேற்படி நூல் மூன்று பதிப்புக்களை கண்டது.குறுகிய காலத்தில் பல்லாயிரம் பிரதிகள் விற்கும் படி என் எதிராளிகளின் பிரச்சாரமே காரணமாயிருந்தது.
ஊஞ்சல் இன்னும் ஆடும்..
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.