1996ம்ஆண்டில் தினகரன் பத்தரிகையில் ஒரு விளம்பரம்.
‘இளம் எழுத்தாளர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். 1000 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் புத்தகம் போடலாம். ‘
விளம்பரத்தை தந்தவர் அக்காலத்தில் ஜும்ஆ பத்தரிகையின் ஆசிரியர் பலப்பிட்டி அரூஸ் என்பவர். அதனைப்படித்து விட்டு ஆயிரங்களையும் ஆக்கங்களையும் அனுப்பியவர்களில் நானுமொருவன்.அச்சில் நமது படைப்பு தொகுப்பாக வெளிவருவதென்றால் சும்மாவா? திருமணம் முடித்து பல வருடங்கள் கடந்தும் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகள் போல் ஓர் எழுத்தாளின் ஏக்கம் பெரும்பாலும் ‘தொகுதி போடல்’ தானே !
நான் கொழும்பில் இருந்ததால் என்னை சந்திக்க விரும்புவதாக வேறு அரூஸ் அஞ்சலிட்டிருந்தார். ஒரு சனிக்கிழமை என்று நினைக்கின்றேன். பலப்பிட்டிக்கு பஸ் ஏறிப்போய்விட்டேன்.
தென்னிலங்கைக்கான முதல் விஜயம் அது. சென்ற பின்புதான் அவரிடம் பலர் பணத்தை கட்டி ஏமாந்து நின்றது தெரியவந்தது.எங்கள் கவிதைகளை டைப் செய்து புரூப் பார்க்க மட்டும் தந்தார்.புருப் பார்க்கும் போதே புத்தகம் கையிலிருப்பதான மகிழச்சியில் திளைத்திருக்கின்றோமம் என்பது வேறு விடயம்.
ஜாமிஆ நளீமிய்யாவின் மாணவர்கள் சிலர் கல்வி தொடர்பான நூல்களை தொகுப்பாக கொண்டு வர 6000.00 ரூபாய் வரை கொடுத்திருந்தனர்.இலக்கிய நண்பர்கள் பலரும் பணத்தையும் ஆக்கத்தினையும் கொடுத்திருந்தனர்.நண்பர் மைக்கல் கொலின் திருகோணமலை தற்போது மகுடம் சஞ்சிகை ஆசிரியர்.பஹீமா ஜஹான் போன்றோரும் இதில் அடக்கம்.
பணத்தையும் ஆக்கத்தையும் அனுப்பி விட்டு எங்களுடைய புத்தகம் அச்சில் வரும் செய்தியை நண்பர்களிடம் பீற்றித்திரிந்ததில் வெறும் கேலி மட்டும்தான் ஈற்றில் மிஞ்சியது.
தான் நடாத்தும் ஜும்ஆ பத்திரிகைக்கு ஆயுள் சந்தா திரட்டியுள்ளார். என்பதை பிற்காலத்தில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.ஆயிரம் ரூபாய் இழப்பு என்பது பெரிதல்ல .எம்மை நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்தது மகா தவறு .அதற்காக அரூஸ் இன்று வரை யாரிடமும் வருத்தமோ மன்னிப்போ கேட்டதாக இல்லை.
ஏமாற்றி பிழைப்பவர்களிடமிருந்து அப்படியொரு நல்ல வார்த்தைகளை நாம் எதிர்ப்பார்ப்பதும் கூடாதுதானே. இந்த மோசடி குறித்த எனது ஆதங்கத்தை 1997 ஜுன் 18ம்திகதி சரி நிகரில் இப்படி எழுதித்தீர்;த்தேன் “ புத்தகம் போடலியோ புத்தகம் !”
இப்போதும் சிலர் பதிப்பகம் நடாத்துகின்றோம்,புத்தகம் போடுகிறோம் என்று அப்பாவி எழுத்தாளர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் கறக்கும் இழி தொழிலை கச்சிதமாக செய்து வருகின்றனர்.
‘என்ன சுகமா மச்சான்?’ என்று கேட்பதை விடுத்து நண்பர்களும் தெரிந்தவர்களும் ‘கவிதப் புத்தகம் வந்திட்டா?’ என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர்.
புத்தகம் போட்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எம்மை ஆட்கொண்டு விட்டது.கையில் பணம் இல்லை.என்ன செய்ய யோசித்துப்பார்த்தேன்.1000 புத்தகம் போட 24000. ரூபாய் கேட்டார்கள். அப்போது நான் கள் எலியாவில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.
திஹாரியில் இருக்கும் அங்கவீனர் நிலையம் நடாத்தும் அச்சகத்தில் புத்தக வேலைகளை பாரம் கொடுப்பதென்று தீர்மானித்தாயிற்று.கள் எலிய சியாத் மாஸ்ரரின் நண்பர் ஜெம்சீத் ஆசிரியர்தான் திஹாரியில் அச்சகத்திற்குப்பொறுப்பாக இருந்தார்.
சியாத் மாஸ்ரர் மூலம் அச்சகத்தில் புத்தகத்தை கொடுத்து அட்வான்சும் கொடுத்தேன். மிகுதிப்பணம் வேண்டுமே. அக்காலத்தில் சம்பளம் வெறும் 6000.ரூபாய் இக்காலத்தில் அது 60.000.00 ஆயிரத்திற்கு சமன்.
உம்மா எனது பதற்றத்தை பார்த்து விட்டு கழுத்தில் கிடந்த ஒரு மாலையை கழற்றி விற்றுவிட்டு 10000.00 பத்தாயிரம் தந்தார்கள்.புத்தகம் போட்டாயிற்று. இது முதல் பிரசவம். அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அது திருப்தியாக விற்றுத்தீர்ந்தது.
ஊஞ்சல் இன்னும் ஆடும்..
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.