‘மனிதனுக்குள்ளிலிருந்து எழும் அக அழைப்பே கவிதை’என்ற நெரூதாவின் வரிகள் நபீலின் கவிதைகளை படித்து முடித்த போது தவிர்க்க முடியாமல் நெஞ்சில் கிளர்ந்தது.
கவிதை எழுதுவது என்பது எல்லோருக்கும் வலாயப்பட்ட கலையல்ல. அதுவும் கவிதையை வசியம் செய்து தான் விரும்பிய வண்ணம் செதுக்குவதும்,அதற்கு அளவான சட்டை போட்டு அழகு பார்ப்பதும் சாமாண்ய விடயமல்ல.
கவிதை ஒரு சிலருக்குத்தான் இப்படி தொண்டு செய்து காலை நக்கிக்கொண்டு கிடக்கும்.அது நபீலுக்கு வாய்த்திருக்கிறது.
இந்தியாவில் இருந்த போது ரிச்சர்ட் பார்ட்டன் குரங்குகளின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி குரங்குகளின் பின்னால் அலைந்து திரிந்தார். முடிவில் 18 ஒலிக்குறிப்புகளை அவதானித்து பதிவு செய்தார்.அந்த ஒலிகளை அவர் எழுப்பும் போது குரங்குகள் அதற்கு மறு மொழி பகர்ந்ததாக பட்டர்ன் தனது பயணக்குறிப்பில் குறிப்பிடுகின்றார்.
நபீலுக்கும் உயிரினங்களின் மொழி புரிந்திருக்கிறது.அல்லது நபீலின் மொழியை அவைகள் புரிந்து கொண்டு நட்புடன் நெருங்கியிருக்கின்றன என்பதற்கு காலமில்லாக்காலத்தில் பொதிந்திருக்கும் சில கவிதைகள் சாட்சி.
நபீலின் அனேக கவிதைகள் அழகியலை வரமாகப்பெற்ற மொழி நடை கொண்டது.எதிர்பாராத திருப்பத்தில் நிகழக்காத்திருக்கும் ஓர் அதிசயம்போல் வியப்பின் முனைக்கு நம்மை இட்டுச்சென்று அந்தரப்படவைக்கும் இயல்பு கொண்டது.
அவர் கையாளும் மொழியின் மரபும், தொன்மங்களை அவாவி நிற்கும் விந்தையும் அலாதி. முஸ்லிம் தேசத்திற்கே உரிய மொழி நடையும்,கூர்மையும் அவர் கவிதைகளில் ஊடுபாவாக நம்மை இரசிக்க வைக்கின்றன.
இயற்கையின் கண்ணாடியாக நின்று பேசும் நபீலின் கவிதைகள் மடியில் கிடத்தி தலை கோதுகையில் கிறங்கி மூடும் பூனைக்குட்டியின் கண்களைப்போல் ஆசுவாசம் கொள்கிறது.அது நம்மை வேறோர் தளத்திற்கு அழைத்துச்செல்கிறது.
78 கவிதைகளும் அதிகம் பேசுவது தன்னிலையில் நின்றுதான்..
நபீலுடன் எல்லா உயிரினங்களும் பேதமின்றிப்பேசுகின்றன. அரூபங்களும்,உருவங்களும் பேசுகின்றன.அவற்றின் இருப்புக்குறித்து நபீல் நம்மை மிரமிக்க வைக்கின்றார்.
அவர் குருவியோடு இப்படிப்பேசுகின்றார்.
பிடித்துப்பார்க்க ஆசைதான் குருவி உன்
ரோமங்கள் ஒவ்வென்றாய்...
முகமெங்கும் கறுப்படித்து
குதப்புறத்தில் வெள்ளைகுத்தி
பாக்களவு உடல் வளர்த்து
இறக்கை கோதுகிறாய்
உலகத்தோடு உன்னையும் ஒரு வீராங்கணையாக
அர்த்தங்கொள்ளவா பார்க்கிறாய் பக் : 16
பல்வேறு அர்த்தங்களை தேடிச்செல்லும் தர்க்கம் பொதிந்தது நபீலின் கவிதைகள்.உலகில் உயிரற்ற எதுமில்லை என்ற உள்ளுணர்வை அவர் இலகுவாக பதித்து விடுகிறார்.
அவர் காற்றை இப்படி கோபித்துக்கொள்கிறார்.
வெளிச்சமணைந்து விடிந்த உலகமாய்
முதுகொடிந்து பொறுக்கிய
என் கடதாசிக்கட்டுகளை
பறவைகளாக மாற்றி விடுகிறாய்
சற்று முன் என் கதவைச்சாத்திய புயலே! பக் : 30
கூனிப்பெத்தா ஒரு கதை போல் விரியும் சித்திரம்.முதுசொம்களின் மனவோட்டங்களை கவிதைக்குள் நபீல் உயிர்ப்பித்திருப்பது திறமைதான்.
குட்டான் பெட்டி, புழுங்கள் அரிசி போன்ற கவிதைகள் வறுமையின் உயிரற்ற சித்திரங்கள்.
அதிகாரவர்கத்தின் அராஜரகங்களையும்,மன அவசத்தையும் நபீல் இப்படி பாடுகிறார்.
ஊமையாகிக்கத்துகிறோம் ஃசீறி எழுந்த போது கால்கள் பின்னின.
இலை விழுந்து முதுகெலும்பு உடைந்தது. ‘மண் புடவை ; பக்: 76
இறந்த பின்னும் வாழ விடாத கொடியவர்களின் அதர்மங்களை நினைத்து நபீல் காட்டமாக விம்மி வெடிக்கிறார்
….சடலமே நீ
மீளவும் முளைப்பாய் என்றா தோண்டி எறியப்பட்டாய் ? பக் : 76
வாழ்வதற்கு ஒரு துண்டு நிலத்தையேனும் விட்டுவைக்காத பாசிசம்,புதைப்பதற்குள்ள உரிமையையும் பறித்தெடுத்து விரட்டியதை மனசாட்சியுள்ளவரால் சகித்துக்கொள்ள முடியாது. நபீலும் நியாயங்களின் மனசாட்சியாய் விம்மிச்சலிக்கின்றார்.
இந்த சமூகத்தின் கையகலாத்தனம் அவர் வார்த்தைகளில் இப்படிக்கொப்பளித்துத்தெறிக்கிறது.
‘…அன்றிரவு விரட்டியதில் மிச்சம் வைக்க முடியவில்லை
அவசரத்திற்கென்று உடுத்திக்கொள்ள
மண் ஃ புடவையாகி மசிந்து கிடக்கிறது’
அவர் கவிதைகள் பறவையாகி,கடலாகி,நீராகி,பனியாகி,காற்றாகி, வெயிலாகி, மலர்களாகி, மரங்களாகி, வனமாகி, பூச்சியாகி, பட்டாம்பூச்சியாகி, தும்பியாகி,நம்மை அதனதன் பின்னால் ஓடிஓடி அலையவைக்கின்றன.
கடலின் மேல் அவருக்குள்ள பாந்தமும், பக்தியும், அச்சமும் அவற்றின் இயல்புடன் கவிதைகளில் வீசியடிக்கின்றன. அது வாசகனையும் ஆழிச்சுழியாய் உள்ளிழுத்து சுழற்றிவிடுகிறது.
ஓங்கரிக்கும் கடல்,கடலிறைத்த சொற்கள்,அலையும் பட்டுக்கடல்,கடலில் சுழி ஓடும் நம் சந்திப்பு போன்ற தலைப்புக்களும் சில கவிதைகளில் கடல் பற்றிய புனைவும் கடலின் மீதான காதலை சொல்வன.
‘சிறகு உதிர்ந்த பகலில்’.…
நரி ஊளையிடும் மயானமாகி
பற்றி எரிகிறது கடல்…. பக்: 78
‘தூரிகை வர்ணத்தில்.’.
முற்றுமாய் என்
சிநேகிதங்களைத்தேடுகின்ற
கடற்கரை வெளிச்சம் மறைகிறது. பக்: 79
‘இதற்கு முன் பார்த்ததே இல்லை நானி’ல்
இதோ கிடக்கிறது ஒரு கயிறு
உன் கூந்தலை அள்ளி முடித்துக்கொள் கடலே…. பக்: 98
‘அலையும் பட்டுக்கடலி’ல்
காற்றெழுந்தால் அலையும் பட்டுக்கடல் ஓசை செவிகளில் எரிந்து கொண்டு நுழைகிறது.. பக்: 95
‘கருமுகிலை விழுங்கிய பறவைகளி’ல்
காற்று விசையில் முகம் உலர்த்தி
பறவைகள் ஃ கருமுகிலை விழுங்கிப்பறக்கின்றன
கரையைக்கடித்துரைக்கிறது கடல் பக்: 91
‘பித்தத்’தில்
குழம்பித்திரிகின்றன புள்ளினம்
இன்னும் ஒரு கல் விழுந்தால்
தளும்பி விடும் கடல் பக்: 75
‘வெட்டு முகத்தி’ல்
கடல் மயங்கிய வேளை கைதான மீன் குஞ்சின்
சலசலப்புக்கேட்கும்.. பக்: 62
‘வேர்வை’யில்
அரும்பும் வேர்வையில் கிறங்கி
பொங்குகிறது ஒரு மகா கடல் உள்ளே.. பக்: 57
‘மூடிய நிர்வாண’த்தில்…
சோப்புக்கட்டியாகி மாறி
தேய்த்துக்கழுகிறது கடல் .. பக்: 49
‘வானமாகி நானி’ல்…
இன்னும் ஒரு படி குனிந்தது வானம் கடலைக்குடித்து தாகம் தீர்த்து.. பக்: 43
‘உயிர்ப்புக் கற்களி’ல்…
ததும்பும் கடல் பறவை
அதன் அலகில் துலங்கிற்று ஈரத்துயர் கசிந்த என் பாடல் பக்: 40
கடலிறைத்த சொற்களில்…
….பட்டு மேனி கடலிறைத்த சொற்கள் காற்றடைந்து அந்தரத்தில் மிதக்கின்றேன். பக்: 39
‘தெற்குத்திசை’யில்
…சிற்றலைகளில் புரண்டு விளையாடும் படலங்களே விரிக
தென்திசையில் உடல் வளைந்து பாம்பு போல எழுக… பக்: 34
‘மீன் மாலை’யில்
பருவ முதிர்ச்சியடைந்த கடல்
‘மீன் மாலை’யில்
பருவ முதிர்ச்சியடைந்த கடல்
கரைக்கன்னியின் இதழ்கள் கிள்ளும் ஓர் அந்தி மாலை.. பக்: 26
‘ஓங்கரிக்கும் கடலி’ல்
..உன் நிராகரிப்பின் வடுக்கள் செறிக்காமலா
ஓங்கரிக்கிறது கடல்… பக்: 22
‘உச்சத்தி’ல்
தூரத்தை நெருடலுடன் கடந்து எதிரே விரிந்து
கிடக்கும் அந்த வங்கக்கடல்… பக்: 19
‘நிலாப்பாலி’ல்
கூந்தலுக்குள்ளே இருட்டி மழை பெய்த
மேகம் கடலோடு புரண்டு படுக்கிறது. பக்: 52
கடல் ஓர் அதிசயம்.அதிசயங்களின் மகா அதிசயம்.விந்தையான பிரபஞ்சத்தின் மர்ம முடிச்சுக்களை தன்னகத்தே வைத்திருந்து மிரமிக்க வைப்பது கடலின் இயல்பு.குமுறுவதும், சீறுவதும் பின் அடங்கிப்போவதும் அதன் பிறவிக்குணம்.
அந்தக்கடலின் ஒவ்வொரு அசைவையும் வொவ்வேறு தருணங்களில் நுணுக்கமாக கையாண்டிருக்கும் நபீல் கடலின் கவிஞன்.
காலச்சுழியில் சில கவிதைகள் அடித்துச் செல்லப்பட்டாலும் பெரும்பாலான கவிதைகள் அலைகளைப்போல் சாசுவதமாய் வாழும் என்பது வாஸ்தவம். இது போதும் நபீலை ஒரு கவிஞனாக வாழ வைக்க.
நபீல் சோலைக்கிளியின் அணைப்பில் வளர்ந்த கவிஞர்.அவரின் தாக்கம் இவர் கவிதைகளையும் தொட்டுப்பார்த்திருக்கின்றது ஒன்றும் மிகையானதும் ஆச்சர்யமானதுமல்ல. நபீலின் கவிதைகள் குறித்து சோலைக்கிளி
‘…ஒவ்வொரு கவிதையிலும் அரைவாசிப்பாகத்திலாவது கவித்துவம் பொங்கித்தெரிகின்ற நபீலுடைய கவிதைகள் குறைந்தது ஒவ்வொரு மிளகு மாதிரியாவது 'ஆகி’ வந்திருக்கிறது.
25.09.2010
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.