நாட்டில் அமுலுக்கு வரும் அதிரடி சட்டங்களால் பிரஜைகள் பாதிக்கப்படுவது குறித்து கதிரையில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு அக்கரை கிடையாது.
தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிராக தேசத்தில் எழுந்த பிரமாண்டமான எதிர்ப்பை பார்க்கின்ற போது மக்களின் கலகத்திற்கு முன் ஆட்சியாளர் அடிபணிவதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலை.!
ஒரு சட்டத்தை அமுல்படுத்தும் போது நாட்டு மக்களின் கருத்துக்களும், துறைசார் அறிஞர்களின் ஆலோசனையும் பெறப்படவேண்டும்.
அது தொடர்பான அறிவார்ந்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காக மக்களின் அபிலாசைகள்,விருப்பு வெறுப்புக்கள் எதனையும் கரிசனை கொள்ளாது எடுத்தேன் கவிழ்த்தேன் என சட்டங்களை அமுல்படுத்துவதும் பின் வாபஸ் பெறுவதும் நல்லாட்சிக்கு அழகான விடயமல்ல.
( நல்லாட்சியே கனவாகிப்போன தேசத்தில் ஒரு கதைக்கு சொல்கிறேன்)
முட்டாள்தனமான சட்டப்பிரகடனங்களுக்கு உதாரணமாக தனியார் துறையினரின் உத்தேச ஓய்வூதியத்திட்டத்தைக்குறிப்பிடலாம். அது வந்த வேகத்தில் திரும்பி விட்டது.
கமெராக்களுக்கு முன் அமர்ந்து கொண்டு "அசடு வழிய" இதனை மறுபரிசீலனை செய்கிறோம் என அரசாங்க அமைச்சர்கள் பேசிய போது பாவமாக இருந்தது.
இப்படித்தான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப்பயிற்சியின் நிலையும்.இத்திட்டத்திற்கும் கல்வி சமூகத்திடமிருந்து பலத்த எதிர்ப்புக்கிளம்பியுள்ளது.
அத்திட்டத்தின் கதி நீதி மன்றங்களில் இழுபடும் போது, மற்றுமொரு குண்டை தூக்கிப்போட்டு உடைத்துள்ளது அராசங்கம்.
அதிபர்களுக்கும் இராணுவப்பயிற்சி வழங்கப்படவேண்டும். அதற்கு சொல்லும் காரணம் ஓடும் மாணவர்களை துரத்திப்பிடிக்க மதில் ஏறிப்பாய இந்தப்பயிற்சி உதவுமாம்.
ஏற்கனவே சில அதிபர்கள் இடிஅமீ்ன்களாக,ஹிட்லராக,முசோலினியாக இருக்கின்ற நிலையில் இராணுவப்பயிற்சியும் வந்து விட்டால் பாடசாலைகள் 'பட்டலந்த முகாம்'களாக மாறுவதைத் தவிர வோறொன்றும் நடக்காது.
இந்த நாட்டில் அமைச்சர்கள் சொல்லும் நகைச்சுவைகளுக்கு பஞ்சமே கிடையாது.
அதில் ஒன்றுதான் உயர் கல்வி அமைச்சரின் கல்வியை இராணுவ மயப்படுத்தும் புரட்சித்திட்டங்கள்.
மற்றது பான்கீன் மூனை சுட்டுத்தள்ள கையில் துப்பாக்கியுடன் களனி மீன் சந்தையில் அலைந்து திரியும் கலாநிதி மேர்வின் சில்வா.
இன்னுமொரு மகா ஜோக் பான்கின் மூனின் கொடும்பாவியை எரித்து உண்ணாவிரதமிருந்து ஐக்கியநாடுகள் சபையில் இருண்ட முகத்துடன் 2600 வது புத்ததத்வ ஜெயந்தி அறிக்கை வாசித்து சிவப்புச்சட்டையாகி மஞ்சள் நிறத்திற்கு மாறிய வீரரான வம்ச.
அறிக்கைகள் இடல்,போராட்டம், எதிர்ப்பு அணிகள், சட்ட அமுலாக்கம், அல்லது அறிமுகம் எதிலும் அரசாங்கமும் நிதானமில்லை.அமைச்சர்களும் நிதானமில்லை.எடுத்தேன் கவிழ்த்தேன் என துள்ளுவதும் பின் அள்ளுவதும் வெட்கம் கெட்ட செயல்.
இப்போது "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி" என்றிருக்கின்றது அதிகார இயந்திரத்தின் நிலை.
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.