Saturday, 5 February 2011

அஸ்தஃபிருள்ளாஹ் திருடர்கள்

சுனாமி வந்து சிலர் செல்வந்தராகினர்.ஆழிப்பேரலையில் அகப்பட்டதை  சுருட்டிக்கொண்டது  இருக்க,உயிருடன் இருக்கையில் சொந்த மனைவியை அலையடித்துக் கொண்டு போனதாக கதை விட்டு புதுப்பொண்டாட்டி தேடி அனுபவித்தவர்களின் கதையும் உண்டு. காணி நிலம் கடலில் போய்விட்டதென்று கடிதம் எழுதி பிச்சை எடுத்து   வாழ்ந்தவர்களும் உண்டு. எல்லோரும் கண் முன்னே குத்துக்கல்லாய் நிற்கின்றனர்.
அனர்த்தங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கும் ஒரு சாமர்த்தியம் வேண்டும்.
சுனாமியில் சிக்குண்டு உயிருக்கு போராடியவர்களின் நகைகளை பிய்த்தெடுத்ததும் மனதாபிமான செயலென்று   சொன்னவர்களையும் இந்த சமூகம் மன்னித்து விட்டதொன்றும் பெரிய விசயமல்ல. குற்றுயிராய்க்கிடந்த சில பெண்களின் நிர்வாண உடல்களை புசித்துப்பார்த்த மனித வெறியர்களையும் இந்த சமூகம் தான் மன்னித்து மறந்துவிட்டது.
இப்போது வெள்ள அனர்த்தம் வந்துள்ளது. முதலாவது வெள்ளம் அள்ளிக்கொண்டு போன உயிர்களும் பொருளாதார சேதங்களும் சொல்லில் மாளா. நாட்டில் உள்ள பரோபகாரிகள் அள்ளிக் கொடுத்தார்கள். அரசாங்கமும் கணக்கற்ற நிவாரணங்களை வழங்கியது.  "நடுக்கடலில் விட்டாலும் நாய் நக்கித்தான் குடிக்கும" என்பது போல் ஆபத்திலும் திருடி வாழ்ந்த நரிக்கூட்டம் திருடிக்கொண்டு தான் இருந்தது.
கல்குடாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் நிவாரணம் வழங்கப்படாமலே நிவாரணம் வழங்கப்பட்டதாக சில கிராம சேவகர்கள் அறிக்கை விட்டு கணக்குக்குக் காட்ட சில பிரதேச செயலாளர்கள் அதற்கு காசு எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தவித்து வந்த மக்களுக்கு இஸ்லாமிய இயக்கங்களும், பள்ளிவாயல் நிருவாகிகளும் சமைத்த உணவு வழங்கி முகாம்களை கவனித்து வந்தன. திருடிப் பழகிய சில குறு நில மன்னர்களான விதானைக்கூட்டம் தாங்கள் சமைத்த உணவு வழங்கியதாக கணக்கெழுதிக் காட்ட சில பிரதேச செயலாளர்கள் காசை கறப்பதில் குறியாக இருக்கின்றனர்.
தொகையைக் கேட்டால் நமக்கு தலை சுற்றுகிறது. முப்பது இலட்சம் .
ஐந்து லீற்றர் தண்ணீர் போத்தல்களைக் கூட கடையில் விற்றுத்தின்ற மார்க்கம் பேசுகின்ற ஒரு ஜி.எஸ் அஸ்தஃபிருல்லாஹ் கள்ளன் என்றால் கோபிக்கவா போறார்.? தவிச்ச முயல அடிச்சுத்தின்னுகின்ற ஹராமிகள் இருக்கும் வரை சுனாமிக்கும் வெள்ளத்திற்கும் கொண்டாட்டம் தான்.

2 comments:

  1. "நடுக்கடலில் விட்டாலும் நாய் நக்கித்தான் குடிக்கும"

    ReplyDelete

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...