தொடர் : 33
தமிழீழம் கேட்கவில்லை,இராணுவத்தை தாக்கவில்லை,சிங்களவர்களை கிழங்கு சீவுவது போல் அரிந்து தள்ளவுமில்லை.அரச வளங்களுக்கு குண்டு வைத்து தகர்க்கவில்லை.ஒன்றுமறியா அப்பாவிகளை ஷெல் அடித்து தகர்க்கவில்லை. ஆட்கடத்தி மௌன மணற்பரப்பில் கொன்று புதைக்கவுமில்லை.கப்பம் கேட்கவில்லை.வணக்கஸ்தலங்களுக்குள் குண்டெரிந்து கடவுளரை அச்சப்படுத்தவில்லை. வலுக்கட்டயாமாக யாரையும் பிடித்துப்போய் பயிற்சி அளித்து போருக்கு அனுப்பவில்லை.என்றாலும் முஸ்லிம்களான எங்களையும் இராணுவம் பயங்கரவாதிகளாகத்தான் பார்த்தது.
தமிழீழம் கேட்கவில்லை,இராணுவத்தை தாக்கவில்லை,சிங்களவர்களை கிழங்கு சீவுவது போல் அரிந்து தள்ளவுமில்லை.அரச வளங்களுக்கு குண்டு வைத்து தகர்க்கவில்லை.ஒன்றுமறியா அப்பாவிகளை ஷெல் அடித்து தகர்க்கவில்லை. ஆட்கடத்தி மௌன மணற்பரப்பில் கொன்று புதைக்கவுமில்லை.கப்பம் கேட்கவில்லை.வணக்கஸ்தலங்களுக்குள் குண்டெரிந்து கடவுளரை அச்சப்படுத்தவில்லை. வலுக்கட்டயாமாக யாரையும் பிடித்துப்போய் பயிற்சி அளித்து போருக்கு அனுப்பவில்லை.என்றாலும் முஸ்லிம்களான எங்களையும் இராணுவம் பயங்கரவாதிகளாகத்தான் பார்த்தது.
சிங்களப்புலிகள் என சிங்களப்பத்திரிகைகள் எழுதுமளவிற்கு புலிகளிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு நாட்டைக்காட்டிக்கொடுத்த சில சிங்கள அரசாங்க ஊழியர்கள் போல் நாங்கள் செயற்படவுமில்லை.
இந்த நாட்டின் படைகளில் இணைந்து நாட்டிற்காக உயிர் நீத்தவர்கள். முஸ்லிம்கள் என்பதற்காக புலிகளால் தேடித்தேடி கொல்லப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் ஊர் காவற்படையினரின் பட்டியல் எங்கள் வரலாற்றுப்பக்கங்களில் ஈரம் காயாமல் இன்னும் இருக்கின்றது.
எனினும் யுத்த காலத்தில் இராணுவம் முஸ்லிம்களையும் பொது எதிரியைப்போல் நடாத்தியது . இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு தப்புவதற்கென்று பல யுக்திகள் கையாளப்படுவதுண்டு.
மன்னம்பிட்டியில் அன்று நிலவிய கெடுபிடிகள் போல் வேறு எங்கும் இல்லை. மன்னம்பிட்டியில் செக் பொயின்டில் நிற்கும் பொலிசாரை ஹிட்லரின் நாசிப்படைகளாகத்தான் மக்கள் பார்த்தனர். மனிதாபிமானமென்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்கு அந்த யாட் கொடூரமாக இருந்தது.கொழும்பில் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் வேலைப்பார்த்த பத்து வருடங்களும் கடுமையான யுத்த காலம் .
வெள்ளி மாலை கொழும்பிலிருந்து புறப்பட்டு மறு நாள் காலைதான் வீடு வந்து சேர்வேன்.இது திருமணத்திற்கு பின் வாரம் ஒரு முறை நடைபெறும் அவஸ்தை.திருமணத்திற்கு முன் கொழும்பே கதி என்று கடத்தியிருக்கின்றேன்.
வரும் போதும் போகும் போதும் செக் பொயின்ட்டுகள் முளைக்கும் இடம் தெரியாது. மன்னம்பிட்டியில் அர்த்த ஜாமத்தில் வந்து பஸ் நிற்கும். காலை 6 மணிக்கு மேல்தான் பயணம் அனுமதிக்கப்படும்.
ஒரு செக் பொயின்ட்யில் இறங்கி ஏறி அமர்வதற்கிடையில் வழியில் யாராவது கை நீட்டி நிற்பாட்டி இறங்கச்சொல்வார்கள். இதனால் சிலர் அமர்வதே இல்லை நின்றபடிதான் பயணிப்பார்கள். EP அல்லது 48 என்ற ரூட் நம்பரை பார்த்தாலே போதும் பிரபாகரனை உயிருடன் பிடித்து விட்ட சந்தோஷம் காக்கிச்சட்டைகளுக்கு.
அதிகாரமே இல்லாத ஊர் காவற்கடையினரும் மட்டக்களப்பு பஸ்களை நிற்பாட்டி பயணிகளிடம் அடையாள அட்டை பார்க்கும் நிலை அன்றிருந்தது.
இதைவிடக்கொடுமை ஒரு செக் பொயின்ட்டைக்கண்டுவிட்டால் பயணிகளை இம்சைப்படுத்தும் பஸ் நடத்துனர்களின் கெடுபிடி.சாமி வரம் கொடுத்தாலும் முட்டுக்கட்டையாக இருக்கும் பூசாரிபோல் பயணிகளை வசைபாடி தள்ளி நெரித்து வரிசையில் கொண்டு வந்து நிற்பாட்டுவார்கள்.காரணம் அடுத்த செக் பொயின்டில் ஏனைய பஸ் வண்டிகளுக்கு முன் இடம் பிடிக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மைதான்.
மன்னம்பிட்டி பற்றி சொன்னேனில்லையா இங்கு கெடுபிடிகள் அதிகம் ஆண்கள் வேறு பெண்கள் வேறு வரிசையில் செல்ல வேண்டும் .ஒருவர் அடையாள அட்டையை பரிசோதித்து பெரிய லெஜ்ஜரில் எழுதுவார். கொழும்பில் எங்கே தங்குவது? ஏன் போறது? எத்தின நாள் தங்குறது? கேள்விகள் முடிவின்றி தொடரும்.
மற்றவர் உச்சிமுதல் உள்ளங்கால்வரை கைகளினால் தடவுவார். அப்படி தடவும் போது கூச்சம் அதிகம் உள்ளவர்கள் படும் அவஸ்தை மிக உச்சத்தில் இருக்கும்.
அதுவும் இடுப்பின் கீழ் கைகள் செல்லும் போது சில கூச்சமுள்ள பயணிகள் அசைந்து கூச்சத்தில் அங்குமிங்கும் நெளிந்து நாட்டியமாடுவார்கள். பின்னால் நிற்பவர்கள் சிரிக்கவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அடக்கிக்கொண்டு நிற்போம்.சிரிப்பது தடைசெய்யப்பட்ட காலம்.
பிரயாணப்பைகள் கவிழ்த்துக்கொட்டப்படும் .ஒவ்வொரு பொருட்களாக உதறி உதறி குண்டுகள் தேடப்படும்.உணவுப் பார்சல்களும் பிரிக்கப்படும். தயிர் சட்டிக்குள் ஈர்க்கிளை விட்டு கலக்குவார்கள் சீனியையும் கொட்டிவிட்டால் நன்றாக இருக்கும் ஸ்ரோவைப்போட்டு குடித்து விடுவார்கள் என்பார்கள் சக பயணிகள்.
எங்கிருந்து வருகின்றாய். எங்கே வேலை பார்க்கின்றாய் என்ன வேலை எங்கே தங்கியிருக்கின்றாய் தங்கியுள்ள இடத்தின் முகவரி. பத்து வருடங்களாக மன்னம்பிட்டியில் ஒப்புவித்த புனித வசனங்கள். அடையாள அட்டையை கையில் வைத்துக்கொண்டு பெயரென்ன என்கிற போது வருகின்ற கோபம் இருக்கின்றதே அது அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத்திற்கு வைக்கப்பட்ட குண்டுகளுக்குச் சமன்.
எங்கள் தேசம் : 238 ஊஞ்சல் இன்னும் ஆடும்.....